பெண் என்றால் இளப்பமா? படவிமர்சனம். இயக்குநர் ஜாக். இனி கதையை பார்ப்போம்.

ஒரு ஆண், ஒரு பெண். இணையத்தில் சந்திக்கிறார்கள். அலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு, குறுஞ்செய்தி மூலம் பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் நேரில் சந்தித்தால் என்ன? நாள் பார்த்து நேரில் சந்தித்துக்கொள்கிறார்கள். நட்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.

இது நடந்து சில நாட்களில் டிவிட்டப் நடக்கிறது. அதில் ஆண் தனது 4 நண்பர்களுடன் கும்மாளமாக பெண்ணைப்பற்றி இழிவாக பேசிவிடுகிறார். அது எப்படியோ அந்தப்பெண்ணுக்கு தெரியவந்து துடிதுடித்து போகிறார். வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோமோ என்ற உணர்வில், அந்த ஆணுக்கு மென்ஷனிட்டு கடும் சொற்களால் அர்ச்சனை செய்கிறார். பின்னர், உள்ளுணர்வு ஏதோ சொல்ல ஐந்து நிமிடத்தில் அழித்தும்விடுகிறார். ஆனாலும் மனதுக்குள், அந்த வன்மத்தீ சுழன்று கொண்டிருக்கிறது பெண்ணுக்கு.

இந்த நிலையில் அந்த ஆணுக்கு ஒரு நெருக்கடி. நண்பனின் தங்கை விபத்தில் சிக்கிவிட, தனது தங்கையாக பாவித்து டிவிட்டரில் ஓர் உதவி கோருகிறார். ரத்ததானம். இதனை பார்த்த அந்த பெண், சாகட்டும், செத்து ஒழியட்டும். என்னை அவதூறு சொன்னாயே என்று ஒரு கருத்தை உதிர்க்கிறார். பின்னர் எதிர்ப்பு வலுத்ததும், அந்தக்கருத்தையும் அழிக்கிறார். அந்த ஆண் நெருக்கடியில் இருந்ததால், அவரின் நண்பர் ஒரு குறிப்பிட்ட மாஸ்க்குக்குள் புகுந்து, அந்த பெண்ணை சராமாரியாக வெளுத்து வாங்குகிறார். ஏக வசனம். ஒரே வித்தியாசம், அப்பெண் ஆங்கிலத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இவரோ சுந்தரத்தமிழில், மென்ஷனிடாமல் பலமாக பலமுறை வாழ்த்தியிருந்தார். இவர் ஏற்கனவே ஒரு எழுத்தாளர் விசிறிகிளப்மீது இதேபோல் வாழ்த்திய பின்னணியை உடைய கேரக்டரை கடந்த படத்தில் செய்தவர்தான். இந்த பெண்ணும் எழுத்தாளர் என்ற அடைமொழியுடன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தை அறைகுறையாய் அறிந்த சில பதர்கள் (எஸ் மீ) கண்ணியத்தை பற்றி வகுப்பெடுக்க, ஷாலினியும், சச்சினும் அழைத்து வரப்படுகிறார்கள். வார்த்தைகள் உபயோகத்தை பற்றி கூறினால், ஆண்-பெண் யாருக்கு வெற்றி, மாஸ் என்ற ரீதியில் செல்கிறது ஊரார் வழக்கு.

இதற்குமுன்னர் இது போன்ற ஒரு சம்பவத்தில் மெளனமாக இருந்தவர்களை கூடவே இருந்தியே செவ்வாழ நீயாவது சொல்லியிருக்கக்கூடாது என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புகார், அதற்குப்பின்னர் நடந்த கைது நியாயமா, அநியாயமா என்பது நிரூபிக்கப்படாத நிலையில் சில அறிவுஜீவிகள் அது நியாயம் என்ற தீர்ப்பை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் நமது கதைக்கு தேவையற்றது.

அழுது விடிகிறது டிவிட்டர். காலையில் ஒரு டிவிட்லாங்கரில் பெண்ணின் விளக்கம் வந்திருந்தது. மன்னிப்பு கேட்பது மாதிரியிருந்தது, தவறு என்று ஒப்புக்கொள்வது போன்றே இருந்தது, அவைகளை அழித்ததால் அதற்கு கவலை கொண்டதாய் அர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டிய தொணியில் இருந்தது. ஆனாலும், தனது நிலையை நியாயப்படுத்தியே இருந்தது.

ஆணின் நண்பன் டிவிட்லாங்கரும் வந்தது. அது நான்தான் என்று ஒப்புக்கொண்டு, அப்பெண் அப்படிப்பேசியதால் நானும்... என்ற தொணியில், இனியும் அப்படி பேசினால், அப்படியே செய்வோம் என்றும் கூறப்பட்டிருந்தது.

பின்னர் அந்த ஆணின் டிவிட்லாங்கர். மன்னிக்க, நான் பேசியது தவறுதான், ஆனால் பெண் பேசியதும் தவறுதான், நண்பர் பேசியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இவை அனைத்தும் பொதுவெளியில் நடந்தேறியது. ஆனால் ஆணோ, இதற்காக ரியாக்சன் கொடுத்த ஊரார் மற்றும் பஞ்சாயத்தார்களை, வேடிக்கை பார்த்தவர்களை வெகுவாக கடிந்து கொண்டார். இது எங்கள் இருவருக்குமான பிரச்சனை, நாங்களே தீர்த்துக் கொள்வோம் சுபம் என முடித்துவிட்டார்.

இக்கதை பல டிவிஸ்டுகளை கொண்டுள்ளது. இதில் எனக்கும் சிறுபாத்திரம் அளித்த டைரக்டர் ஜாக்கை உளமாற பாராட்டுகிறேன். ஆண் கேரக்டரை இளகிய மனதாக, மன்னிப்பு கேட்பவராகவும் தவறை திருத்திக்கொள்பவராகவும், மன்னிப்பு கோரும் மாமனிதராகவும் ஜாக் வடிவமைத்து இருக்கிறார்.

பெண் ஆத்திரம் கொண்டு வீட்டைப்பூட்டிக் கொண்டதையும், பெண்புத்தி பின்புத்தி என்பதற்கு இணங்க, கருத்தை உதிர்த்துவிட்டு, பின்னர் அதனை வாபஸ் பெறுபவராக காட்டியிருக்கிறார். இவரது போக்கு பிடிக்காமல் பல ஆண்கள் தியேட்டரில் திரையை கிழிக்கும் அளவுக்கு போனது அக்கதாப்பாத்திரம் சிறப்பாக பாத்திரம் ஏற்று நடித்தற்கான வெற்றி எனலாம். தேசிய விருது உறுதி.

ஆணின் நண்பர், மதுரை வழக்கு மொழியில் பிய்த்து உதறியிருக்கிறார். வசனங்களுக்கு யூ சர்டிஃபிகேட் எப்படி கிடைத்தது என்பது வியப்புதான். படம் வெளிவந்தபின் மாதர் கூட்டங்கள் போராட்டம் செய்திருப்பது, இக்கூற்றை நிரூபிக்கிறது.

இப்படத்தில் சில பாடங்களை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார் டைரக்டர் ஜாக்.

1. இணையத்தில் என்னதான் நல்லவனாக இருந்தாலும் முகம் தெரியாத ஒருவனை சந்திப்பது ஆபத்தில் முடியும்.
2. யாகாவாராயினும் நாகாக்க என்பதை விளக்கியிருக்கிறார்
3. பெண்களை தவறாக பேசினால், உடனே நம் வீட்டுப்பெண்களுக்கு நெருக்கடி வரலாம், அப்போது சமுதாயம் எவ்வாறு ரியாக்ட் செய்யும் என்பதை துல்லியப்படுத்தியிருக்கிறார்.

டைரக்டர் ஜாக்குக்கு சில கேள்விகள்

1. ஆண் மற்றும் 4 நண்பர்கள் குதூகலமாக பேசிய அந்த 'ஏ'த்தனமான வார்த்தைகள் எப்படி பெண்ணுக்கு போய் சேர்ந்தது என்பது விளங்கவில்லை. அந்த நால்வரில் ஒரு எட்டப்பன் யார் என்பதை கடைசிவரை சொல்லவேயில்லை.
2. நண்பனாக வரும் கேரக்டர், கடந்த படத்திலும் அதே கேரக்டரை செய்திருப்பதால் சிறிது அலுப்பு தட்டிவிடுகிறது. ஏன் இதை யோசிக்கவில்லை?
3. ரைட்டர் என்ற பதத்தின் மீதுள்ள நண்பனின் வன்மத்தை கடந்த படத்திலும், இந்த படத்திலும் விளக்காமல் சுபம் போட்டது ஏன்?

கடைசியாக ஆணின் விளக்கத்துக்கு பிறகாக பெண்ணின் ரியாக்சன் என்பதை பார்ட்-2 வாக படமெடுக்கும் எண்ணம் உள்ளதா என்று தெரியவில்லை. குடும்பத்துடன்-குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய படமில்லை. இந்தியத்தொலைக்காட்சிகளில் வராது, வரவும் முடியாது. எனவே குடும்பத்தில் உள்ளவர், தனித்தனியாக பார்ப்பது உத்தமம். "'பெண் என்றால் இளப்பமா?" - ஜாக்கின் மிகச்சிறந்த படைப்பு என்பதில் ஐயமேயில்லை.

Reply · Report Post