Rajanism

R~ · @Rajanism

16th May 2013 from TwitLonger

இணைய நண்பர்களிடம் அடையாளங்களை மறைக்க வேண்டிய அவசியங்கள் குறித்து எழுதவேண்டிய அவசியம் எழுந்துவிட்டது. இதற்கு நாம் காலக்கொசுவர்த்தியை சற்று பின்னோக்கி சுழற்ற வேண்டியிருக்கிறது. டிவிட்டர் தளம் தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலமாவதற்கு முன்னர் பிளாகர் நண்பர் வால் பையன் நான் பேச்சிலராக இருந்த காலத்தில் ஒரு முறை அவினாசியில் எனது குவாட்ரஸில் வந்து சரக்கடித்தார்.சில குவார்ட்டர் பாட்டில்களைக் காலிசெய்த நிலையில் நிறை போதையில் ஜட்டியோடு அமர்ந்திருந்தார். இரவு மணி 11.30 ஆகிவிட்டிருந்த போது அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பரும் மட்டையாகிக் கிடந்தார்.

இவர்களை எப்படி ஈரோட்டுக்குத் திருப்பி அனுப்புவது என்று யோசித்துக்கொண்டே நானும் சில கட்டிங்குகளைப் போட்டதில் எனக்கும் போதை ஏறிவிட்டிருந்தது. நிறை போதையில் அவரது கொங்கிடைக்கோடு தெரியும் புகைப்படம் ஒன்றை எனது மொபைல் போனில் எடுத்துத் தொலைந்துவிட்டேன். அந்த குடியிருப்பில் இருந்தது மூன்று பேர். புகைப்படம் என் மொபைலில் இருக்கிறது. சம்மந்தப்பட்டவரும் மட்டை கூட வந்தவரும் மட்டை. புகைப்படம் எடுத்தபின்பு நானும் மட்டை.மறு நாள் காலை நான் எழுமுன்னரே அவர்கள் இருவரும் எழுந்து கிளம்பி விட்டனர். இங்கே நான் ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அந்தப் புகைப்படம் எடுத்தது அவர்களிருவருக்குமே தெரியாது.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு வால்பையனுடைய அந்த ஆபாசப்படம் இணையத்தில் உலவக் கண்டபோது நான் அடைந்த அதிர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கவே இயலாது.

அந்த நிகழ்வின் போதுதான் இணையம் எவ்வளவு அபாயகரமானது. அதன் கோரைக்கைகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். இச்சம்பவத்துக்குப் பிறகு நான் திருந்தியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. அதற்குப் பிறகும் டிவிட்டர் நண்பர்களுடன் பலமுறை சுற்றுலாத் தலங்களுக்கும் பல்வேறு இடங்களுக்கும் சென்று கொண்டு தான் இருக்கிறேன்.

இணையத்தின் ஆண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கும் இந்தச் சூழலிலும் கண நேர சாராய ஆசைக்காக பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஊர் ஊராக ஆண் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

திருவாளர்கள் தேங்கா, கே7, டேவிட், தும்ததா,ஆறுமுகம் ஆகியோருடன் கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு(பேரைக்கேட்டாலே குலை நடுங்கவில்லையா) என்ற இடத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கு ஒரு அருவியில் வெள்ளை நிற ஜட்டியுடன் நான் குளிக்கும் படங்கள் அடுத்த சில நாட்களிலேயே வெளியாயின. யோசித்துப்பாருங்கள் வெள்ளை நிற காட்டன் உடை நனைந்தால் என்னவாகும் என்று. அப்போதும் நினைத்தேன் இனி இந்த அபாயகரமான இணையச் சூழலில் இங்கனம் அஜாக்கிரதையாக எதுவும் செய்யக்கூடாது என்று.

அதன் பிறகு பாண்டிச்சேரியின் கடற்கரையில் டேவிட், தங்கவேல், கும்கி, தேங்கா ஆகியோருடன் குளித்த போதும் இதே போலதான் மர்ம நபர்களால் படமெடுக்கப்பட்டேன். நல்லவேளை அப்போது நான் பர்மடாஸ் அணிந்திருந்தேன். ஆனாலும் மேலாடை ஏதுமில்லை.

திரு குணா அவர்களின் கல்யாணத்திற்குச் சென்ற போதும் கூட காவிரிக்கரையில் அதே மர்ம நபர்களால் படமெடுக்கப்பட்டு கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டேன்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல கடந்த பிறந்த நாளான 18.11.2012 அன்று சென்னை ஈசிஆர் சவுக்குத்தோப்புக் கடற்கரையில் நான் குளிக்கும் காட்சிகளை வீடியோவாகவே சில மர்மநபர்கள் எடுத்து இணையத்தில் உலவவிட்டனர். ஏனய்யா பிறந்தநாளென்றும் பாராமல் ஒரு ஆணை அவனது அனுமதியின்றி படமெடுத்து இணையத்தில் உலவவிடுகிறீர்களே நீங்களெல்லாம் மனிதர்கள் தானா!? இதில் அன்றைய சம்பவத்தின் போது உயர்திரு மொட்டை மாம்ஸ் கூட அங்கே இருந்தார். அவரையெல்லாம் நம்பித்தானே நாங்கள் முக்கால் நிர்வாணமாகக் குளிக்கிறோம். இங்கே படமெடுத்தது அவரென நான் குற்றஞ்சுமத்தவில்லை ஆனால் அவரெல்லாம் இருக்கும்போதே மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டுவதைத்தான் குறிப்பிட முயல்கிறேன்

இவை தவிரவும் பலமுறை திருமண சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல கொள்ள, நல்லது கெட்டதுகளில் எங்காவது தங்கவும் நேர்கையில் பல டிவிட்டர் நண்பர்களுடன் பாதுகாப்புணர்வுடன் இருக்க முடிவதில்லை. எப்போது மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டுவார்களோ என்ற பயம் உள்ளூர இருந்துகொண்டே இருக்கிறது.

டிவிட்டர் மீட் என்று எங்கு சென்றாலும் பேண்டைக் கழட்டி லுங்கியை மாற்றும் அந்த சில நொடிகள் கூட பயமாகவே இருக்கின்றன. எங்கிருந்தோ ஒரு மெகாபிக்ஸல் டிஜிட்டல் கண் நம்மைப் படமெடுக்கும் உள்ளுணர்வு உறுத்தியவண்ணமே இருக்கின்றது.

ஆகவே, நமக்கான பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்து கொள்ளவேண்டியிருக்கிறது. இப்போது நன்றாக வியாக்யானங்கள் பேசுவோர் நமது அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் உச்சு கொட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்யப்போவதில்லை.

எதோ சொல்ல வேண்டுமென்று தோன்றியது. இன்று கொதி இறங்கியதும் இறக்கி விட்டேன். மனதிலிருந்த பாரம் குறைந்தாற்போல் ஒரு நிம்மதி.

நன்றி,

மிகுத்துச் செறிந்த வாஞ்சையுடன்

ராஜன்.

Reply · Report Post