விடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்? பார்ட்-1

நான் ஏன் விடுதலைப்புலிகள் அமைப்பை மிகக்கடுமையாக எதிர்கிறேன் என்கிற கேள்வி நண்பர்கள் பலராலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. இதற்கான விளக்கமே இந்த பதிவு.

விடுதலைப்புலிகள் அமைப்பை நான் ஒருகாலத்தில் பிரமிப்புடன் பார்த்து வளர்ந்தவன். அவர்களை கண்ணைமூடிக்கொண்டு ஆதரித்தவன் . அதை மறைக்கவும் முடியாது. மறுக்கப் போவதும் இல்லை. ஆனால் புலிகள் மீதான எனது ஆதரவில் முதல் விரிசல் விழுந்தது பத்மனாபா படுகொலை மற்றும் ராஜீவ் காந்தி படுகொலைகளின்போது. காரணம், இந்த படுகொலைகளை தமிழ்நாட்டில் நடத்திய விடுதலைப்புலிகளின் செயல் தவறு மட்டுமல்ல, மறக்கவோ மன்னிக்கவோ முடியாத குற்றம் என்பதே எனது புரிதல். இந்த இரண்டு படுகொலைகளை அவர்கள் தமிழ்நாட்டில் வந்து செய்ததும், செய்த விதமும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் செயல் என்றே எனக்குப் பட்டது.

காரணம் ராஜீவ்காந்தியையும் பத்மனாபாவையும் கொல்ல புலிகளுக்கு நூறு காரணங்கள் இருக்கலாம். அவர்களின் பார்வையில் அது நியாயமாகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த வாதப்பிரதிவாதங்கள் எவையும் எனக்கு அவசியமில்லாதவை. எனது பார்வையில் இந்த படுகொலைகளை புலிகள் தமிழ்நாட்டில் வந்து செய்ததனால் உண்டான பாதிப்பும் அதில் அநியாயத்துக்கு கொல்லப்பட்ட புகைப்படக்காரர் ஹரிபாபு, தூக்குமர நிழலில் இன்றும் நிற்கும் பேரறிவாளன், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஒப்பற்ற புகைப்பட நிபுணர் சுபா சுந்தரம், மருத்துவ தாதி பத்மா, அவர்களின் குடும்பங்கள் நிற்க நிழலில்லாமல் சென்னையில் முச்சந்தியில் நின்றது எதிரொலிக்குத் தெரியும். இதில் சுபா சுந்தரம் செத்தே போனார். நர்ஸ் பத்மா இன்றுவரை 20 வீடுகள் மாறிவிட்டார். இறக்கும்வரை அவரால் ஒருநாளும் நிம்மதியாக இருக்க முடியாது.

இதற்கெல்லாம் யார் காரணம்? விடுதலைப்புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் அவரது முன்யோசனையற்ற மூர்க்கத்தனமான கொலை ஒன்றே அரசியல் ஆயுதம் என்கிற ஆபத்தான போக்கும் மட்டுமே காரணம்.

Reply · Report Post