maithriim

maithriim · @maithriim

21st Jan 2014 from TwitLonger

படித்து முடித்தக் கையோடு புத்தக ஆய்வை எழுதத் தூண்டியுள்ளது @penathal சுரேஷ் alias ராம் சுரேஷ் எழுதியிருக்கும் கரும்புனல் நாவல். எடுத்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றாத அளவு சுவாரசியமானக் கதை.மிக மிக மாறுபட்டக் கதைக் களம். அதுவே கதையின் பலம். நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை படிக்கத் தூண்டும் அடுத்தக் காரணி. உரையாடல்கள் மூலம் கதைச் சொல்லும் இவரின் பாணி மிகவும் சுவாரசியமற்ற சரித்திர பூகோள விஷயங்களையும் படிப்பவர்கள் புரிந்து கொண்டு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.

பீகார் நிலக்கரிச் சுரங்கம், பீகாரின் சாதி வெறி,பொருளாதாரத்தில் பின் தங்கிய உழைக்கும் வர்க்கம், ஆளுநர்களின் அசுர பலம், தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத தொழிற் சங்கத் தலைவர்,மலிந்து கிடக்கும் ஊழல், தலைமை சரியில்லாததால் சிதைந்து போகும் சமுதாயம் என இந்தக் கதையை நல்ல ஒரு திரைப்படமாக எடுக்கக் கூடிய அளவு துரோகமும், காதலும், சூழ்ச்சியும், சஸ்பென்சும் நிறைந்ததாக உள்ளது. எந்தக் கதையும் நம் அனுபவத்தோடு சொல்லப்படும்போது நம்பகத் தன்மை அதிகமாகிறது. அதனாலேயே இந்தக் கதை அன்னியமாகத் தோன்றாமல் நமக்கே நடப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த ஒரு சமுதாயத்திலும் நாம் காணும் மனிதர்களைக் கொண்டதாக உள்ளது.

இது இவரின் முதல் நாவலா என்று தெரியாது. ஆனால் மிகவும் சிறப்பாக எழுதி பண்பட்ட எழுத்தாளர் நிலையில் நிற்கிறார். இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு அவர் புகழ் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் :-)

Reply · Report Post