குக்கூ. தங்கமீன்களுக்கு பிறகு தியேட்டருக்கு போய் பார்த்த படம். படம் எப்படி இருந்தாலும் என் 25 டாலர் ராஜுமுருகனுக்கு போய்ச்சேரவேண்டுமென குறியாய் இருந்தேன். குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் கண்டுபிடித்து, 60 கிமீ ஓட்டிக்கொண்டு போய் (ரிலீசாகியிருக்கிறதா என்றே தெரியாமல்) சில பல பிரயத்தனங்கள்.

படம் என வந்துவிட்டால் நான் கென்னடி மாதிரி, படம் எப்படி செய்தது என பார்ப்பதில்லை, படம் எனக்கு என்ன செய்தது என மட்டும் பார்ப்பது. A செண்ட்டரில் ஓடுமா, சேலம் கலக்‌ஷன் என்ன, மதுரை சோலைமலையில் மாலைக்காட்சிக்கு கூட்டமென்ன என கவனிப்பதில்லை. சிம்பு சொல்வது போல் படம் என்னை போட்டுத்தாக்கினால் போதும்.

அவ்விதத்தில் குக்கூ பெருமளவுக்கு எனை ஈர்க்கிறது. படத்தின் களம், எளிய கதைமாந்தர்கள், தேடித்தேடி பிடித்த வசனங்கள் (சிலது துருத்தல்) என ஒரு செல்லூலாய்ட் வட்டியும் முதலுமாய் இருந்தது. பல சாதாரண காட்சிகளிலும் எனக்கு சிலிர்த்தது, சிலிர்க்க வைக்கவேண்டிய பல காட்சிகள் சாதாரணமாய் கடந்தது. கிட்டத்தட்ட இது தான் குக்கூவின் பிரச்சனை என சொல்லலாம். என் அழுகைக்கும், சிலிர்ப்புக்கும் ராஜுமுருகன் தாண்டி திணேஷ் என்ற அந்த பையன் காரணம். 3 வருடம் இப்படத்திற்காக முதலீடு. படத்துக்காக செத்துரு என சொல்லியிருந்தால் செத்துருப்பான் போல (ன் உரிமையில் போடுகிறேன்). கொஞ்சம் தேசலாய், Nasalஆய் குரலும் மிகப்பெரிய பலம் தினேஷுக்கு. ஒப்பீட்டளவில் நாயகி மாளவிகாவின் நடிப்பு பெரியதாய் கவராவிட்டாலும் இயல்பு.

படத்தில் நான் பெரியதாய் ரசித்தது ராஜுமுருகனின் டீடைலிங். ஒரு காட்சியில் சடசடவென மழை வர நாயகனும்,நண்பன் இளங்கோவும் (இருவருக்கும் பார்வையில்லை) வேகமாய் நடக்கிறார்கள். இளங்கோ சின்னப்பள்ளத்தில் வழுக்கி சமாளித்து நடக்கிறான். இது கேட்டு வாங்காது இயல்பாய் நடந்திருந்தாலுமே அந்த டேக்கை ஓகே செய்த ராஜுமுருகனிடம் ஒரு தேர்ந்த சினிமாக்காரன் தெரிகிறான். போலவே கடந்தகால,சமகால அரசியல்,சினிமாவை பயமில்லாது பெயரை சொல்லியே சீண்டுகிறார். சினிமாவுக்கென ஒரு செயற்கை முன்ஜாக்கிரதைத்தனம் உண்டு. கட்சி பெயரெல்லாம் “மக்கள் கட்சி” என பொதுவாய் வைப்பார்கள். ஊரில் இல்லாத நடிகர் பெயராய் சில்பா குமார் என வைப்பார்கள். அதை உடைத்த வகையில் ராஜுவுக்கு பாராட்டு.

ராஜூவிடம் நல்ல கதைசொல்லி இருக்கிறான். அழகாய் படமெடுக்க வருகிறது. சமகால தமிழ்ச்சமூகத்தை உள்ளபடி காண்பிக்க, பயமின்றி நக்கலடிக்க தெரிகிறது. எம்ஜியார்,சிவாஜி முதல் அல்டிமேட் வரை பெயர் சொல்லியே ரெஃபர் செய்ய முடிகிறது. சிறுசிறு நடிகர்களிடம் அட்டகாசமான நடிப்பை வாங்கத்தெரிகிறது. தேவை கொஞ்சம் unlearning (வட்டியும் முதலுமாய்), நல்ல கத்திரி, “இது வேணாமே சார்” என வம்படியாக சண்டைப்போடக்கூடிய அசிஸ்டண்டுகள். படம் மருத்துவமனையிலேயே எனக்கு முடிந்துவிட்டது. அதற்கு பிந்தைய 15 நிமிட மூன்றாம் பிறை,”இன்னிசை பாடி வரும்” துள்ளாதமனம்துள்ளும் டைப் க்ளைமாக்சுகளுக்கான காலம் கடந்துவிட்டது. It just killed the impact,the movie otherwise had. குறையென்றால் எனக்கு இதுதான் படுகிறது.

மற்றபடி, இசை,ஒளிப்பதிவு என டெக்னிக்கலி முதல் தரம். பாடல்களுடன் பின்னணி இசையும் மிக நன்றாகவே செய்திருக்கிறார் சந்தோஷ். குறிப்பாய் எனக்கு மிகவும் பிடித்த “கோடையில் மழை போல” வைக்கப்பட்டிருக்கும் இடமும் அட்டகாசம்.

இந்தப்படம் 500 பேர் உட்காரக்கூடிய திரையரங்கில், ரிலீசான வாரயிறுதியில் நானும், என் மனைவியும் மட்டுமாய் பார்த்தோம். அலெக்ஸ் பாண்டியனுக்கும் கெட்டக்கூட்டம் வரும் ஊரில் இருக்கிறேன். ராஜுமுருகனுக்கு மட்டுமல்ல, சினிமா என்ற கலைக்குமே நாம் செய்யும் துரோகமாய் இதை பார்க்கிறேன்.

வசூல்,ஓவர்சீஸ் என பேசினாலும், end of the day, Cinema is an art form. பாலுமகேந்திரா சாவுக்கு தான் கூட்டம் வந்தது. டைரக்டர் ராஜசேகரை யார் என்றாவது அறிவீர்களா தெரியாது. அவ்விதத்தில், ராஜுமுருகன்கள் தமிழ்ச்சினிமாவுக்கு அதிமுக்கிய, வரவேற்கத்தக்க தேவை.

உங்களை பூங்கொத்துகளுடன் வரவேற்கிறேன் ராஜுமுருகன் !!

பி.கு: கமெண்டுகளில் “அழுவாச்சி படம்” என சொல்லப்போகும் ஃபாரின் அங்கிள்களுக்கு, நீங்கள் சிலாகிக்கும் Ray, Amelie, La vita è bella என எந்த உலகப்படமும் அழுவாச்சி என சொல்லி இடக்கையால் தட்டிவிட முடியும். தமிழுக்கு ஒரு Ray-ban, பிறபடங்களுக்கு ஒரு Oakley என வேறு கண்ணாடிகள் அணியாதீர்கள் ;-)

https://www.facebook.com/rasanaikkaaran/posts/1434496326792402

Reply · Report Post