மார்த்தாண்டம் வரை சென்று விட்டு பேருந்தில் இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் வழக்கம் போல திருநெல்வேலி வந்து கோவில்பட்டி செல்லும் பேருந்தைத் தேடியபோது ஒரே ஒரு பைபாஸ் ரைடர் சில இருக்கைகளில் ஆளில்லாமல் தேமேவென நின்று கொண்டிருந்தது . நடத்துனரிடம் சென்று கோவில்பட்டி என இழுத்ததும் உள்ள போகாது பைபாஸ்ல எறங்கனும்ன்னா ஏறிக்கோங்க எனும் முத்து உதிர்ந்தது சரி அடுத்த பேருந்து வரட்டுமே என எண்ணி ஓரம் வந்தபோது தான் தெரிந்தது என்னைப்போல் ஒரு சுமார் ஒரு எழுபது பேர் கயத்தார் கோவில்பட்டி செல்ல காத்திருக்கிறார்கள் என . காத்திருப்பு பயனில்லை எனத் தெரியவந்த போது ஒரு சட்டை அணியா பெரியவர் மொபைலில் எவரிடமோ பேசிக்கொண்டிருந்தார். (நான் எப்போதும் போல இணையப் போராளியாய் மொபைலில் ஜேசுதாஸின் ஜீன்சுக்காகப் போராடிக்கொண்டிருந்தேன்.) எப்பிடியாவது சொல்லி ரெடி பண்ணுங்க ஏகப்பட்ட சனம் குழந்தை குட்டிகளோட காத்துக் கெடக்குது என்று கோரிக்கை வைத்து முடித்துக் கொண்டார் . சிறிது நேரத்தில் ஓரமாக நின்ற ஆளும்கட்சிப் பிரமுகரின் பேருந்து விளக்குகளை உயிர்ப்பித்து அருகில் வந்தது கோவில்பட்டி வரை போகும் எல்லா ஊர்க்காரங்களும் ஏறிக்கோங்க என்ற வார்த்தை தேனூற்றியது போல விழுந்தது காதுகளில் .ஏறி அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது அருகில் அமர்ந்தவர் இந்த மனுஷன் மட்டுமில்லைன்னா இன்னும் எவ்ளோ நேரம் காத்திருக்கனுமோ தெரியல எனக் கூறியதும் யாரிவர் என்ற இயல்பான கேள்வியை முன் வைத்தேன் இவர் நம்ம ஐந்தாம் தூண் தன்னார்வ நிறுவனத்தின் அமைப்பாளர் என்றார் ஓ என நான் நெற்றி சுருக்கியதைப் புரிந்து கொண்டவர் போல் மேலும் தொடர்ந்தார் .. இவர்தான் கோவில்பட்டியில் உள்ள பிரதான சாக்கடை மேல் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றப் போராடும் போராளி. நீதிமன்றம் வரை சென்று ஆணை வாங்கி விட்டார் ஆனால் செயல்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை ஆயினும் விடாப்பிடியாக போராடிக்கொண்டிருக்கிறார். ஆக்கிரமிப்பை அகற்றும் வரை சட்டை அணிவதில்லை என சபதமேற்று இன்று வரை சட்டை அணியாமல் இருக்கிறார் என மேலதிகத் தகவலும் தந்தார் பேச்சு சுவாரஸ்யத்தில் அவர் பெயர் கேட்கக் கூட மறந்து போனேன். ஒன்று மட்டும் தெரிந்தது ... போராளிகளுக்கு வயதில்லை வசீகரிக்கும் தோற்றமும் தேவையில்லை ஸ்மார்ட் போனும் அவசியமில்லை தேவை போராட்ட குணமும் சமூக அக்கறையும் என... யார் சொன்னார்கள் காந்தி இறந்து விட்டார் என ... இதோ இதேபோல் எண்ணற்ற காந்திகள் மீடியா வெளிச்சமின்றி சத்தமில்லாமல் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்

Reply · Report Post