மண்ணெண்ணை ஊற்றிச் சினிமா பார்த்த காலம்

தொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூரத்திலிருந்து எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் மீதான தடையை விதித்த காலமது. பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாழடைந்த , சந்திரமுகிக்கள் குடியிருக்கும் பங்களாக்களாக
மாறிவிடவும், சந்திக்குச் சந்தி கிடுகால் வேயப்பட்ட தற்காலிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைந்துவிட்டன.

வெளிர் சிவப்பு கலரில் இருக்கும் பெற்றோல் போத்தல்கள் ஒப்புக்கு இரண்டு போத்தல்களாகவும் மற்றயவை நீலக்கலர் தாங்கிய மண்ணெண்ணைப் (kerosene) போத்தல்களாகவும் இருக்கும். போத்தலொன்று ஐநூறு ரூபாவுக்கு மேல் விற்கும் பெற்றோல் எல்லாம் வாங்கக் கட்டுப்படியாகாது வாகனங்கள் மரக்கறி எண்ணெய்யில் ஓடிக்கொண்டிருந்தன. வாகன இயந்திர எரிபொருள் தாங்கிக்கு மரக்கறி எண்ணையை நிரப்பி ஸ்ராட் பண்ணுவதற்கு பெற்றோலின் சில துளிகள் முகர்ந்து பார்க்க மட்டும் காட்டி அல்லது ஏமாற்றி நம்மவர்கள் வாகனமோட்டிக் கொண்டிருந்தார்கள்.

தொண்ணூறாம் ஆண்டு ஆரம்பம் வரை மின்சார வசதியோடு பொழுது போக்கிக் கொண்டிருந்த சனங்களுக்கு திடீர் மின்சார வசதி இழப்பும், பெற்றோலியப் பொருட்களின் கொள்ளை விலையும் படம் பார்க்கும் பொழுதுபோக்கிற்கும் ஆப்பு வைத்தது. தியேட்டர்களும் ஓய்ந்துவிட்டன. அப்போது தான் மின்சாரம் தரும் மாற்றீடுகள் மெல்ல மெல்ல நம்மவர் கண்டு பிடிப்பில் வந்தன. ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு ஜெனரேற்றர்களும் வீடியோ படப்பிடிப்புக்காரர் பிழைப்பு நடத்த ஓரளவு கை கொடுத்தது.

சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷின்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள், ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளாக அமைந்தன. மண்ணெண்ணை பாவித்து இவற்றை இயக்கமுடியும் என்பதால் செலவும் ஒப்பீட்டளவில் குறைவானதாகப்பட்டது. இவ்வளவு முன்னுரையும் போதுமென்று நினைக்கிறேன்.

அப்போது க.பொ.த சாதாரண தர வகுப்பு படித்து ஓய்ந்த இடைவெளிக் காலங்கள். வேறு பெரிதாக வேலை என்றும் இல்லை. நண்பன் கிரி, சந்திரகுமார் போன்றவர்கள் தகப்பனுக்குத் துணையாக மண்வெட்டி பிடித்துக் தோட்டத்தில் இறங்கிவிட்டார்கள். எனக்கும் எஞ்சியிருந்த சில நண்பர்களுக்கும் டைனமோவில் சுத்திப் பாட்டுக் கேட்பதும் அரட்டை அடிப்பதுமாகக் காலம் கழிந்தது. அப்போது தான் வந்தது "சின்னத்தம்பி" படப்பாடல்கள். யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் ஒரு றேக்கோடிங் பாரில் பதிவு செய்த சின்னத்தம்பி பாடல்களை கசற்றின் ஒலிநாடாவும், டைனமோவும் தேயத் தேயக் கேட்டோம். சின்னனுகளுக்கும் " போவோமா ஊர்கோலம்" பாட்டு பாடமாக்கிவிட்டது. கோயில் திருவிழா நாதஸ்வரக்காரர்களும் தொடர்ந்து "ராசாத்தி மனசிலே" பாட்டு வாசித்து ஓய்ந்து சின்னத்தம்பி படப்பாடல்களுக்கும் தாவிவிட்டார்கள்.


சின்னத்தம்பி பாட்டுக் கேட்ட மயக்கம் படத்தையும் பார்க்கவேண்டும் என்று தூண்டியது அப்போது. ஆளுக்கு ஐம்பது ரூபா போட்டு சேர்த்த பணத்தில் ஒரு வீடியோக் கடைக்காரரிடம் ஜெனறேற்றரை வாடகைக்கு வாங்கி, சின்னத்தம்பி படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு கட்டினோம். சின்னத்தம்பி பட வீடியோ கசற்றுக்கும் அப்போது ஏக கிராக்கி. ஆமிக்காரனைத் தாண்டிக்குளத்தில் தாண்டி ஒரு சில பிரதிகள் தான் வந்திருந்தன.

எங்கள் சகபாடி சுதா துப்பறிந்ததில் சாவகச்சேரியில் ஒரு வீடியோக்கடைக்காரரிடம் சின்னத்தம்பி படம் இருப்பதாகத் தெரிய வந்தது. முதலில் ஜெனறேற்றருக்கான வாடகைப் பணத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டு இணுவிலிலிருந்து சாவகச்சேரி நோக்கி சைக்கிள் வலித்தோம். ஒரு மாதிரி வீடியோக்கடைக்காரரின் வீடும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் மனுஷனோ ஏகத்துக்குப் பிகு பண்ணினார். "தம்பியவை ! நான் அயலட்டையில் இருக்கிற சனத்துக்குத் தான் வாடகைக்கு கசற் குடுக்கிறது, உங்களை நம்பி எப்பிடித் தருவது " என்று அவர் சொல்லவும் சினிமா சான்ஸ் இழந்த புதுமுகத்தின் மனநிலையில் நான். கூடவந்த சகபாடி ஒருவனோ, " அண்ணை நம்பிக்கை இல்லையெண்டால், இந்தாங்கோ என்ரை வொச்சை வச்சிருங்கோ" என்று (உணர்ச்சிவசப்பட்டு ) தன் கைக்கடிகாரத்தைக் கழற்ற வெளிக்கிடவும்,வந்தவர்களில் யாரிடமாவது அடையாள அட்டை இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு நாளை திரும்ப படக்கசற்றுடன் வரும் போது பெற்றுக்கொள்ளலாம் என்று வீடியோக்கடைக்காரர் கொஞ்சம் இறங்கிவந்தார். மணிக்கூடு கழற்றின நண்பனே தன் அடையாள அட்டையைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு பெரிய சாதனை ஒன்றை சாதித்த திருப்தியில் சின்னத்தம்பியுடன் சாவகச்சேரியில் இருந்து இணுவில் நோக்கிய பயணம்.

ஜெனேறேற்றர் குடிக்க இரண்டு போத்தல் மண்ணெண்ணை நானூறு ரூபாய் கொடுத்து வழியில் வாங்கி வந்தோம். அண்டை அயல் சனங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு படம் போட சுதா வீட்டில் ஒரு மணி நேரம் முன்பே டோரா போட்டிருந்தது.படம் போடும் இளைஞர்கள் ஏதோ பெரிய பந்தா காட்டிக்கொண்டு ஆறுதலாகக் கதை பேசி ஒவ்வொன்றாக ஆயத்தப்படுத்தினோம்.

இரவானது, ஜெனறேற்றை சுதா இயக்க, படம் போடும் முனைப்பில் சுரேஷ் இறங்கி ஒருவாறு எழுத்தோட்டம் முடிஞ்சு கதாநாயகன் பிரபு எட்டிப்பார்க்க பொக்கொன்று ஜெனறேற்றர் அணைந்தது. சுதா ஜெனறேற்றை மீண்டும் இயக்க சுரேஷ் மீண்டும் படத்தை இயக்க, தொடந்து 15 நிமிஷம் ஓடியிருக்கும், மீண்டும் குறட்டை விட ஆரம்பித்தது ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். படத்துக்கு வழமையாக ஒரு இடைவேளை தான், ஆனால் நாங்கள் போட்ட சின்னத்தம்பிக்கு இடைவேளை வரமுன்பே ஏழெட்டு இடைவேளைகள்.
வாங்கி வந்த மண்ணெண்ணையில் கலப்படம் என்று புகார் சொன்னது ஒரு சகபாடி, இன்னொன்றோ "இல்லையில்லை, உந்தக் கோதாரி மிஷின் ஒயில் ராங்கில (oil tank) தான் எதோ பிழை" என்றது. ஜெனறேற்றரும் வஞ்சகமில்லாமல் நாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்த இரண்டு போத்தல் மண்ணெண்ணையையும் குடித்துவிட்டு ஓப்புக்கு ஒரு சில மணித்துளிகள் வேலைசெய்துவிட்டு வஞ்சகமில்லாமல் ஓய்ந்தது.

பாதிப் படம் தான் பார்த்திருப்போம். மீதிப் படம் பார்க்க ஜெனறேற்றருக்கு மண்ணெண்ணை இல்லை. நண்பர்கள் எல்லோரும் பக்கத்தில் நின்ற நண்பன் கிரியின் முகத்தைப் பார்த்துக் கண்களால் யாசித்தோம்.
"நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டு தெரியுமடா, சும்மா விளையாடாதேங்கோ, நாளைக்கு இறைப்புக்குத் தான் ரண்டு போத்தில் மண்ணெண்ணை வீட்டில இருக்குது"
என்று முரண்டு பிடித்தான் கிரி. முடிவில் நட்பு வென்றது. இறைப்புக்கு வைத்திருந்த மண்ணெண்ணை சின்னத்தம்பி படத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.


தொடர்ந்து படம் பார்க்கும் ருசி பல்கிப் பெருகியது. கொழும்பிலிருந்து ஜெமினி சினிமா, பொம்மை போன்ற சினிமாப் புத்தகங்கள் தடைசெய்யப்படமுன் வரக்கூடியதாக இருந்தன. அதிலிருந்து பொறுக்கிய துணுக்குகள் மூலம் நானே என்ன படத்தைப் பார்க்கலாம் என்று முடிவு செய்வேன். ராஜ்கிரண் நாயகனாக அறிமுகமான "என் ராசாவின் மனசிலே", அண்ணாமலை, தேவர் மகன், என்றும் அன்புடன், சுந்தர காண்டம் என்று படங்களைத் தெரிவு செய்து கொடுப்பேன். நண்பர்களின் கூட்டு முதலீட்டில் வாடகைக் கசற்றும் ஜெனறேற்றருமாக படம் பார்த்த காலங்கள் அவை. ராஜ்கிரனின் நடிப்பு, ராஜாவின் இசை இவைதான் படம் போடும் நேரம் தவிர்ந்த நம் பேச்சுக்கச்சேரியின் தலைப்புக்கள். சுதா நிரந்தரமாகவே ஊசிலி மெஷின் ஒன்றை ஜெனறேற்றராக மாற்றி அடிக்கடி படம்போடும் திட்டம் கொண்டுவரவும், அவர்கள் வீடு மினி சினிமா போல மாறியது.

பெரும்பாலும் படத்தை இரசித்துப் பார்க்கும் ஆவலை விட, அந்த நெருக்கடியான காலத்திலும் படம் போட்டுக்காட்டி ஏதோ சாதனை செய்த திருப்தி தான் முனைப்பில் இருக்கும். எமது வாலிபப்பருவத்தில் இருந்த ஒரே பொழுதுபோக்கு அல்லது நடத்தை அதுவாகத் தான் இருந்தது.

என் படத் தெரிவுகள் சில சொதப்பியதும் உண்டு. விக்ரம் நடிக்க அப்போது பிரபலமாக இருந்த பி.சி. சிறீராம் இயக்க "மீரா" படம் வருகுது என்று ஆவலைத் தூண்ட, மீராவையும் எடுத்துப் போட்டோம்.
படம் தொடங்கி முடியும் வரை, கதாநாயகனும் நாயகியும் வில்லனுக்கு பயந்து ஒடுகினம் , ஒடுகினம், ஓடிக்கொண்டே இருக்கினம். படம் முடிஞ்சாப் பிறகும் கூட்டாளி அப்புவால் நம்பமுடியவில்லை. இன்னும் ஏதேனும் படம் இருக்கும் என்ற நப்பாசையில் எழும்பவேயில்லை. மற்றவர்கள் தங்கள் மேசம் போனது போல் என்னை முறைத்துப் பார்த்தார்கள். ஆனாலும் என்னுடைய முந்திய தெரிவுகள் சில நல்லதாக இருந்ததால் நானே அவர்களுக்கு நிரந்த ஆலோசகர்.


தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட ஜெனறேற்றர்கள் அடிக்கடி கோளாறு பண்ணும் , மண்ணெண்ணையும் சுத்தமாக இராது, மெஷினுக்குள் கல்மண் எல்லாம் சங்கமமாகி சேடம் இழுக்கும். ஒரு இரண்டரை மணி நேரப்படம் ஐந்து மணித்தியாலத்தையும் எடுத்துப் பார்க்கக் கூடியதாக இந்த ஜெனறேற்றரின் திருவிளையாடல் இருக்கும். அந்த இரவுப் பொழுதுகளில் எல்லா அயல்வீடுகளையும் எழுப்பிவிடும் இந்த ஜெனறேற்றரின் ஒப்பாரிச் சத்தம். இடைக்கிடை அது கோளாறுபண்ணி நிற்கும் போது ஒரு ஆள் பாரமான அந்த இயந்திரத்தைப் புரட்டிக் குலுக்க இன்னொருவர் கை வலிக்குமட்டும் ஜெனறேற்றரின் கயிற்றைச் சுழற்றி இழுக்கவேண்டும். பகீரதப் பிரயத்தன முயற்சியின் பின் தான், பட படவென வெடித்து விட்டு அது இயங்கத் தொடங்கும்.

அப்பிடியும் ஜெனறேற்றர் கை கொடுத்தாலும் இன்னொரு பிரச்சனையும் வானத்தில் வட்டமிடும் ஹெலிகொப்ரர் ரூபத்தில் வரும். ஹெலிச் சத்தம் கேட்டால், " தம்பியவை, படத்தை நிப்பாட்டூங்கோடா, வெளிச்சம் தெரிஞ்சால் சுடுவாங்கள்" என்று பெருசுகள் புலம்பத் தொடங்கும். ஹெலிக்குப் பயந்து ஜெனறேற்றர் ஓயும், ஹெலி அந்தப் பக்கம் போனதும் மீண்டும் அதை இயங்க வைக்க இன்னொரு போராட்டம்.

அந்தக் காலகட்டத்தில் ஒரு வேடிக்கையான சம்பவமும் நடந்தது எங்களூரில். ஒரு வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெனறேற்றர் பக்கத்து வீட்டை அண்டிய வேலிப்புறமாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரருக்கும் இவர்களுக்கும் நீண்டகாலமாகவே பகை. அதனால் தான் விஷமத்துக்காக வேலியை அண்டிச் சத்தமாக வேலை செய்யும் ஜெனறேற்றரை வைத்திருக்கவேண்டும். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வீட்டில் திடீரென்று மயான அமைதி. ஜெனறேற்றர் ஓய்ந்து, ஏதோ விழுவது போல் சத்தம் கேட்கிறது. வெளியே ஒடிவந்து பார்த்தால் ஜெனறேற்றர் அவர்கள் வீட்டு கிணற்றுக்குள் நீந்தி விளையாடுகிறது. யார் செய்திருப்பினம் எண்டு நினைக்கிறியள்?

ஒரு சில மாதங்களில் திரைப்படத்தணிக்கை அமுலுக்கு வருகிறது. ஆபாசக்காட்சிகள் கொண்ட படங்கள் மீளவும் தணிக்கை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீடியோக்கடைக்காரகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. அப்போது மானிப்பாய் வீதியில் உள்ள வீடியோ விமல் என்ற வீடியோக்கடையில் வைத்துத் தான் திரைப்படத்தணிக்கைக் குழு இந்தப்பணியைச் செய்து வந்தது. அப்போது பிரபு தேவா நடித்து வெளிவந்த "இந்து" படம் ஒன்றேகால் மணி நேரப்படமாகத் தான் தேறியது. ஆபாசப்பாடல்கள், காட்சிகள் நீக்கப்பட்டதால் வந்த கைங்கர்யம் அது. இப்படிச் சில படங்கள். பேசாமல் தணிக்கைக்குழுவில் இருந்தால் நல்லது என்று ஒரு சகா சப்புக்கொட்டியது.

இன்று நினைத்த நேரத்தில் செய்மதித் தொலைக்காட்சி, டீவிடி, வீ,சீடி என்று படம் பார்க்கவும் பொழுதுபோக்கவும் ஆயிரம்வசதிகள்.ஆனால் அன்று சகாக்களோடு எமது எல்லைக்குட்பட்ட ஆசைகளோடு படம்பார்த்துப் பொழுது போக்கிய நினைவுகள் சுகமானவை, அந்தச் சின்னச் சின்னச் சந்தோஷங்களை இழந்த வாலிப வயசு நினைப்புக்கள் வலி நிறைந்தவை.

ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.

Reply · Report Post