Sricalifornia

Sri · @Sricalifornia

7th Dec 2014 from TwitLonger

அம்மாவின் அடிகள் வலித்ததில்லை ஏனோ


அடுப்படியில் பாத்திரங்கள் உருள ஆரம்பித்துவிட்டன. இனி சரமாரியாக தெலுங்கில் திட்டத் துவங்குவாள் அம்மா. அவள் ஆற்றாமையும், அங்கலாய்ப்பும் கலந்த குரலை கேட்குமுன் வெளியேறவேண்டும். அவசரமாக வாசலில் இருந்த நலிந்துபோன நீல நிற ஹவாய் செருப்பில் கால்நுழைத்து வீதியில் நடக்க ஆரம்பித்தேன். நான்கு வீடு தள்ளி சாணத்தால் பூசி மெழுகிய வாசலில் குனிந்து , வெள்ளைப்பொடியால் அன்னப்பறவைகளை வரைந்துகொண்டிருந்தாள் காமாட்சி பாட்டி. முன்வரிசைப் பற்கள் வாயில் அடைபட்டு கிடக்க விருப்பமில்லாமல் வெளியே சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் அவள் பெயர் அந்த தெருவில் எல்லோருக்கும் பல்லுபாட்டி தான். என் காலடி கேட்டு நிமிர்ந்தவள் "நான் அப்பவே சொன்னேன், இந்த கெழவி பேச்ச எங்கடீ கேக்கறீங்க? இப்ப பாரு ஐயரம்மா வைய்ய ஆரம்பிச்சிருச்சு!" என்று கடிந்து கொண்டாள் . "அட போ பாட்டி, இதுக்கு பயந்தவ நானில்ல, இனி நீ எப்ப மீன் கொழம்பு வெச்சாலும் கொஞ்சம் குடுக்க சொன்னார் நான்னா" என்று சிரித்து, அன்னப்பறவைகளை மிதிக்காது அகண்ட கால் வைத்து தாவிச்சென்றேன். பாட்டியின் சிரிப்பு பின்னிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த தெருவில் நான்கு மாடுகள் , சில கோழிகள், ஒரு குடிசை என்று மிக சுவாரசியமான ஒரே வீடு அழகுபாக்கியத்தினுடையது. எங்கோ மறைந்திருக்கும் பெயர்க்காரணம் அவள் சிரித்தால் மட்டும் வெள்ளைப்பல்வரிசையில் விளம்பரமாய் வந்து போகும். "ஏ இந்தா அருணா இந்த கயித்த பிடி!" உரிமையாக கையில் திணித்தாள் மாட்டைக் கட்டிய கயிறை. "யக்கா கொளத்துக்கு நானும் பத்திட்டு வரவா?" என் குரலைத்தாண்டி என் ஆசை முன்னிருந்தது. "வேண்டாந்தாயி,பொறவு உங்கம்மா வைய்யும், நீ போ, நாம்பாத்துக்கறேன்" "யக்கோவ் ப்ளீஸ்கா, ப்ளீஸ்கா, நான் நாளைக்கு வேணா உனக்கு அம்மாவோட ரசம் கொஞ்சம் கொண்டுவந்து தரேன்". அம்மாவின் ரசம் அந்த தெருவில் ஒரு சினிமா நடிகரைப்போல. தோரணம் கட்டி , ரசிகர்மன்றம் வைக்காத குறை.
குளிர்ந்த நீரில் நின்றுகொண்டு வைக்கோல் வைத்து மாட்டை கழுவி, அவ்வப்பொழுது வாலை ஆட்டி அது இறைக்கும் நீர் முகத்தில் படும் சுகம் பிடித்திருந்து எனக்கு. சட்டென்று நிமிர்ந்து என்னை கூர்ந்து, "இது அம்மாவுக்கு தெரிஞ்சா முதுகு தோல உரிச்சுரும்ள!" என்றாள். "அம்மா அப்டித்தான் அழகு, விடு" என்றேன் .வீடு திரும்புகையில் நடக்க பிடிக்காது மாட்டின் மேல் ஏறி உடக்கார்ந்து வந்தேன். இனி இறங்கலாம் என்று எத்தனிக்கையில் பின்னிருந்து யாரோ காதை திருகி இழுத்தார்கள். "ஏமிடே நீ கோல!! யாவாள சீரு போரு ரம்பு ராவடி!! என்று ஆரம்பித்த அம்மாவின் அர்ச்சனை வெகு விரைவில் முதுகில் இடியாய் விழ ஆரம்பித்தது.கை ஓய்ந்ததும் "நின்னு அடிவாங்கறியேடி! ஓட கூட தெரில இவளுக்கு" என்று விம்மி அணைத்துக்கொண்டாள் . நான் தலையை திருப்பி அழகை பார்த்து கண்சிமிட்டி சிரித்ததை பார்க்கவில்லை அம்மா.
அம்மாவின் அடிகள் வலித்ததில்லை ஏனோ.

Reply · Report Post