பத்ரி சேஷாத்ரியும் பாபர் மசூதியும்


செப்டெம்பர் 2010ல் பத்ரி சேஷாத்ரி எழுதிய "பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். ஏனோ அதிகம் சந்தோஷப்பட்டேன்." என்ற ஒற்றை ட்வீட்டின் (https://twitter.com/bseshadri/status/25869547372) ஸ்க்ரீன்ஷாட்டை இன்று மாலை கொடுத்து இதற்கு மேலும் கிழக்கின் நூல்களைப் புறக்கணிக்காமல் இருக்க வேண்டுமா எனக் கேட்டிருந்தார் ட்விட்டர் நண்பர் கர்ணாசக்தி (https://twitter.com/karna_sakthi/status/542315960892272640).

மேலோட்டமாய்ப் பார்த்தால் அல்லது உடனடியாய் உணர்ச்சிவசப்பட்டால் அவர் கருத்தில் உண்மை இருப்பது போல் தோன்றக்கூடும். சினமும் அசூயைம் எழக்கூடும். அப்போது நான் பயணத்தில் இருந்ததால் வீடு திரும்பிய பின் விஷயத்தை ஆராய்ந்து விட்டு இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மூன்று விஷயங்களை நான் அறிய‌ நினைத்தேன். (அப்போது தான் அந்த ட்வீட்டின் முழுப் பொருளும் தொனியும் காரணமும் விளங்கும். இல்லை என்றால் தமிழினி மெல்லச் சாகும் என பாரதி சொன்னான் எனக் கட்டுக்கதை கிளம்பியதைப் போலாகி விடும்.) 1) அவர் எந்த சூழலில் எதைப் பற்றிப் பேசுகையில் இதைச் சொன்னார். 2) அவர் இதற்கு முன்பும் பின்பும் பேசிய கருத்துக்கள் என்ன? 3) இதை எழுதிய போதும் அந்தக் கருத்தை சரி என்கிறாரா?

அதனால் அவர் அன்றைய தேதியில் (29 செப்டெம்பர் 2010) போட்ட அத்தனை ட்வீட்களையும் தேடி எடுத்து வாசித்தேன். என் சந்தேகம் சரியே. அன்று பத்ரி சொல்ல வந்த மொத்த விஷயத்தில் ஒரு வரி மட்டும் எடுத்தாளப்பட்டு குற்றம் சாட்டப்படுகிறார். இதைத் திட்டமிட்ட திரித்தலாகவே கொள்ள வேண்டியுள்ளது.

*

Search Results:
https://twitter.com/search?f=realtime&q=from%3Abseshadri%20since%3A2010-09-29%20until%3A2010-09-30&src=typd

இதில் அவர் பாபர் மசூதி பற்றிப் பேசி இருப்பவற்றைத் தொகுத்துக் கொள்ளலாம்:

https://twitter.com/bseshadri/status/25869547372
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். ஏனோ அதிகம் சந்தோஷப்பட்டேன்.

https://twitter.com/bseshadri/status/25869597383
அப்போது நான் படித்த பல்கலைக்கழகத்தில் ஷஹாபுத்தீனின் பெண்ணும் படித்தார்(ள்). அழகாக இருப்பார்(ள்). ஹ்ம்ம்ம்ம்.

https://twitter.com/bseshadri/status/25869682733
அவரும் வேறு சிலரும், சங்கப் பரிவாரத்தைக் கண்டித்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். அங்கு போய் கலாட்டா செய்யலாம் என்றுகூட நினைத்தேன்.

https://twitter.com/bseshadri/status/25869722782
பதிலாக மசூதி இடிப்பு ஆதரவுக் கூட்டம் ஒன்று நடத்தலாமா என்றுகூட யோசித்தோம்.

https://twitter.com/bseshadri/status/25869919137
எதிராளி என்று நினைப்பவர்களைக் காயப்படுத்தும் ஒருவித வெறி.

https://twitter.com/bseshadri/status/25869942293
ஆர்.எஸ்.எஸ் பற்றி, வி.எச்.பி பற்றியெல்லாம் அப்போது ஒன்றும் தெரியாது.

https://twitter.com/bseshadri/status/25870013586
ராமன் vs பாபர் என்பது எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரமாகத் தோன்றியது. நிச்சயம் ராமன்தானே சரியாக இருக்கவேண்டும்?

https://twitter.com/bseshadri/status/25870048157
பொதுவோ என்னவோ, அதுதான் அப்போதைய உண்மையான மனநிலை.

https://twitter.com/bseshadri/status/25870985128
பாபர் மசூதி இடிப்பு குறித்து 1992 நினைவுகளை தட்டிப் பார்த்து எழுத முயற்சி செய்கிறேன். SCT-இல் ஏதேனும் எழுதியிருக்கலாம்.

https://twitter.com/bseshadri/status/25871032058
அப்போது நான் பாஜகவை ஆதிரித்தேன். தமிழகத்தில்கூட பாஜக ஆட்சி வரவேண்டும் என்று எழுதியிருந்தேன்.

https://twitter.com/bseshadri/status/25871125211
பாஜக பற்றி நான் soc.culture.tamil-ல் எப்போதோ எழுதிய பதிவு!

https://twitter.com/bseshadri/status/25871172105
அடப் பாவமே! என் கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்று எப்போது சொன்னேன். நான் 18 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்ததைச் சொன்னேன்.

https://twitter.com/bseshadri/status/25873278530
நான் அப்ப நிச்சயமா காவி அபிமானியாத்தான் இருந்தேன். Overseas Friends of BJP என்றெல்லாம் தேடி சேரப் பார்த்தேன்.

https://twitter.com/bseshadri/status/25873432203
இப்ப காவி இல்லை.

https://twitter.com/bseshadri/status/25874114359
18 வருடங்களில் பல விஷயங்களில் கருத்துகள் மாற்றம் அடைந்துள்ளன. வருத்தம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் அவை பற்றி எழுதியும் உள்ளேன்.

*

கவனித்துப் பாருங்கள். பத்ரி 1992ல் (அதாவது இந்த ட்வீட் எழுதப்படும் 18 வருடங்கள் முன்) அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழத்தில் பிஹெச்டி செய்து கொண்டிருந்த சமயம் இந்துத்துவக் கருத்துக்கள் கொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறார். பிற்பாடு அதிலிருந்து விலகி வந்து விட்டதையும் தெளிவாகச் சொல்கிறார். 2010 செப்செம்பர் இறுதியில் வரவிருந்த அயோத்தி தீர்ப்பை ஒட்டி பழைய நினைவுகளைப் பற்றி எழுத முனைகையில் நேர்மையாகத் தான் இப்படியான‌ மனநிலையில் அப்போது இருந்ததை ஒப்புக் கொள்கிறார். உண்மையில் அந்த நேர்மைக்கு அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

நாம் வளரும் சூழல் நம் நிலைப்பாடுகளைத் தீர்மானிக்கும். பிற்பாடு நமது வாசிப்பும் அனுபவமும் நம் மன விசாலத்தை அதிகரிக்கும் போது அந்த நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படும். ஒரு ரஜினி ரசிகனாக இருந்து கமல் ரசிகனாக மாறுவது முதல் இந்துத்துவா கோட்பாட்டிலிருந்து மதச்சார்பற்ற நிலைப்பாட்டுக்கு மாறும் வரை எல்லாத் தளங்களிலும் இப்படிப்பட்ட மாற்றம் சாத்தியமே. அது வரவேற்புக்குரியதே. அப்படி மாறும் போது பழையதைப் பற்றிக் குறிப்பிடுவதில் என்ன பிழை இருக்க முடியும்? அது ஒரு ஃப்ளாஷ்பேக்.

இணைய கொத்தாளத் தேவர்கள் ஒன்று சேர்ந்து எடிட் செய்யப்பட்ட விருமாண்டியின் பேச்சுக்களை வெளியிட்டு நடத்தும் அபத்த‌ நாடகமாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எதையும் மேலோட்டமாய்ப் பார்த்து முன்முடிவுகளுக்குச் செல்வதோ, முழுப்பார்வையின்றி தீர்ப்பளிப்பதோ முட்டாள்தனமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

நுனியளவு செல் என்றான் பாரதி. அதைத் தான் செய்திருக்கிறேன்.

Reply · Report Post