பச்சைக் குழந்தையைக் குளிப்பாட்டுவதை பற்றிய என் அனுபவம்.



பச்சைக் குழந்தையை குளிப்பாட்டுவது
சாதாரண விஷயமல்ல.
அது ஒரு கலை.
எனக்கு அது ஒரு கவிதையாக தெரியும்.
என் பாட்டியிடமும், அம்மாவிடமும்
அந்த ஜால வித்தையை
கண்டு இருக்கிறேன்.
இதமான சூட்டில் தண்ணீருடன் சுடு நீரை விளாவி,
தன் இரு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு,
பந்தமாய் குழந்தையை படுக்க வைத்து ,
அந்த பிஞ்சை கவிதையாய் கொஞ்சு தமிழில்
செல்லம் செய்து,
பின்னர்
சிறிது தண்ணீர் ஊற்றி அவன் சூடு
தாங்கும் அளவை உறுதி செய்து,
குளிப்பாட்ட ஆரம்பிப்பார்கள்.
முதலில் திருப்பிப் போட்டு
குழந்தையின் பின்தலை, முதுகு பகுதிகளில்
குளிப்பாட்டுவர்கள்.
பின்னர் மல்லாக்க படுக்க வைத்து என்று..
குழந்தையின் தலை நனைய வேண்டிய அளவு,
கண்களிலும்,வாய், காதுகளிலும் நீர் புகாமல்
தண்ணீர் விடும் பாந்தம், ஒற்றை விரலை குழந்தையின்
வாயில் விட்டு குழப்பி விடும் லாவகம்,
ஆச்சரியப் படவைக்கும்.
இவை எல்லாமே விரைவாய் நடந்து
முடிந்து விடும்.,
குழந்தை அதிக நேரம் நீரில்
ஊறி விட கூடாது என்பதால்.
நல்ல உலர்ந்த துணியால்
குழந்தையை சுற்றி,
குழந்தைக்கு வலிக்காமல், ஈரத்தை ஒற்றி எடுத்து
சாம்பிராணி புகை போட்டு, பவுடர் போட்டு,
கண்ணுக்கு மையிட்டு ,
மறக்காமல் கண்திருஷ்டி பொட்டு இட்டு....
அதன் அம்மாவிடம் கொடுத்து,
பால் கொடும்மா, குளிப்பாட்டின குழந்தைக்கு
பசிக்கும் என்று கூறி மடியில் கிடத்துவார்கள்.
சிணுங்கியும் அழுவதுமாக இருந்த குழந்தை
அம்மாவின் மடியில் படுத்து
தாய்ப்பால் குடிக்கும் போது அதனுடைய
அழகும், அமைதியும் தவழும் முகமும்
பார்க்க அலுக்காது.
பால் குடிக்கும் போதே தூங்கி விடும்.
அந்த தாயின் முகத்தில்
பெருமை சொல்லில் அடங்காது.
அந்த பாட்டிகளின் முகத்தில் ஒளிரும்
கம்பீரம் நம்மை ஆளுமை செய்யும்.

தள்ளிப் போடா..குழந்தைக்கு பால் கொடுப்பதை
என்ன பார்வை என்று என்னை அம்மா விரட்டும் போது,
என் மனைவியின் முகத்தில் நாணமும்,என்னை
கேலியாக பார்த்த அழகும் மறக்க முடியுமா !

Reply · Report Post