என் அனுபவம்,பார்த்த,படித்தவைகளை கருவாகக் கொண்டதே இந்த “செருப்படி” சிறுகதை.


“செருப்படி”

மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அரை மணி நேரமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். சலிப்புத் தட்டவில்லை. மாலை வரை விளையாடிக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. மாதம் தவறாமல் வந்து பார்க்கிற பாட்டி வீட்டு தோட்டம் தான்.

கொய்யா மரம் போன தடவை பார்க்கும் போது வெள்ளையாய் பூப் பூத்து கண் குளிரச் செய்தது. இந்தத் தடவை காய் விட்டு வியக்க வைத்து விட்டது. வாழையும் விதி விலக்கல்ல ஒரு குழந்தையைத் திடுதிப்பென்று குமரியாய் பார்த்த மாதிரி, நிகு நிகுன்னு அசத்துற வளர்ச்சி. தென்னை பற்றிக் கேட்கவே வேண்டாம் எப்போதும் போல கம்பீரமாக நிற்கிறது.கத்தரி, வெண்டை, தக்காளி செடிகள் போன தடவை நோய் வந்து சுனங்கி கிடந்தது. பாட்டி மருந்து அடிக்க மாமா கிட்ட சொல்லி இருந்தாங்க. இப்போ எல்லா செடியும் தெம்பா தெரியுது.

பாட்டி வீடு ஊரின் எல்லையில் கிழக்கு ஓரத்தில் இருந்ததால் வசதி. வீட்டு பக்கத்துலையே இந்த மாதிரி ஒரு தோட்டம் போட முடிஞ்சிருக்கு. தாத்தா இறந்த பிறகும் பாட்டி நல்ல படியா பராமரிச்சிட்டு இருக்காங்க.

“வளரு.., அங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” வீட்டினுள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது ரொம்ப நேரம் தோட்டத்தில் இருந்து விட்டேன். புட்டு ஆறிப் போயிடும்னு ஆச்சி கவலைப் பட்டுக் கிட்டு இருப்பாங்க. பின் வாசல் வழியே உள்ளே சென்றேன்..

“உன்னைப் பார்க்க பெரியப்பா வந்திருக்காரு”
“பெரியப்பாவா?”
“ஆமா பெரியவீட்டு பெரியப்பா.”

வீட்டினுள் சென்றேன். வராண்டாவிலிருந்த மூங்கில் சேரில் நாட்டாமை பெரியப்பா உட்கார்ந்திருந்தார். எனக்கு நடுக்கமாகி விட்டது. “அட, இந்த பெரியப்பாவா ? இவரு ‘விளம்பர பேனரு’ கேக்கறதுக்கில்ல வந்துருப்பாரு ?

“வாங்க, பெரியப்பா!”
ஆச்சியிடம் பேசிக் கொண்டிருந்தவர் என் குரல் கேட்டுத் திரும்பினார். “வாடா வளரு, சௌக்கியமா இருக்கியா ?”
“நல்லா இருக்கேன் பெரியப்பா!” எங்க கேட்டுருவாரோ என பயம். பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தேன்.
“வேற ஒண்ணுமில்லடா.. உங்கிட்ட கடையில உள்ள பழைய பேனரு கேட்டுருந்தேன்ல. அதான் கொண்டு வந்திருந்தா வாங்கிட்டு போலாம்னு வந்தேன்டா.

பெரியப்பா கேட்டே விட்டார். சடுதியா என்ன சொல்றதுன்னு தெரியல. பொய் சொல்ல நாக்கு கூசியது. எப்படித்தான் சிலரெல்லாம் அப்பட்டமான பொய்ய உண்மை மாதிரியே தெம்பா பேசுறாங்களோ..! என்னால முடியல.சின்ன சின்ன பொய் சொல்ல கூட உடம்பு உதறலெடுக்குது.

”அது.. வந்து..” என திணறினேன்.
“மறந்துடியாடா ? விடு ரொம்ப நாளாயிட்டுல்ல.. அதான். பரவால்லடா. அடுத்த தடவை வரப்போ வாங்கிக்கிறேன். பாவம், உனக்க்கே பல சோலி .இதுல நா வேற எடைஞ்ச பண்றேன்.”
“அப்படில்லாம் இல்ல பெரியப்பா.. இதுல என்ன இருக்கு ? அடுத்த தடவ கண்டிப்பா கொண்டாந்து தரேன்.”
“ரொம்ப சந்தோசம்டா.. இத கேக்கத்தான் வந்தேன். அப்ப நா வரட்டுமா?”
“போயிட்டு வாங்க .” மூன்று பேரும் சேர்ந்து சொல்லவும் சிரித்து விட்டு எழுந்து விட்டார். எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எங்களோட கடையில பண்டிகை காலங்களில் தள்ளுபடி அறிவிப்பு விளம்பர பேனர் அதிகம் வைப்பது வழக்கம். போன தடவை வந்த போது பேச்சோடு பேச்சாக இரண்டு பழைய பேனரு துணி வேண்டுமென்று கேட்டு இருந்தார். நானும் முதலாளி இடம் கேட்டு வாங்கி வருவதாக சொல்லி இருந்தேன். ராணி மதினி தடுத்து விட்டாள்.

அன்றைக்கு மதினி வீட்டுக்கு சென்றிருந்த போது சுவரில் தொங்கிய தினசரி காலண்டர் கண்ணில் பட்டது. சிவகாசி செஞ்சுரி பட்டாசு கம்பெனியின் காம்ப்ளிமெண்ட் அது. எவ்வளவு விலை கொடுத்தாலும் அது போல நல்ல காலெண்டர் கிடைப்பது அரிது. மதினியிடம் கோபித்துக்கொண்டேன்.

“ஓசில கிடைச்சா நீங்களே வச்சிகிடுறதா? எங்கள மாதிரி பாவப் பட்டவங்களுக்கு குடுக்குறதில்லையா?”
மதினி அலுத்துக்கொண்டாள். “நல்லா சொன்ன போ, உனக்கு கிடைக்காத காலண்டரா ? என் தங்கச்சி அந்த பயர்ஆபீசுல வேல பாக்கா, ரெண்டு கெடச்சதுனு கொண்டாந்து கொடுத்தா. அதுலயும் ஒண்ணு நாட்டாம மாமா வாங்கிட்டுப் போயிட்டாரு.”
“அவரா! இன்னிக்கு காத்தால எங்கிட்ட கூட பழைய விளம்பர பேனரு கேட்டுருக்காரு.”
“அதான.. நீ மட்டும்தான் பாக்கி இப்போ நீயும் மாட்டிக்கிட்டியா?”
“என்ன மதினி சொல்லுத..?”
“அவருக்கு வேலயே இதான். எப்பபாரு யாராவது ஒருத்தர்கிட்ட என்னத்தையாவது கேட்டுகிட்டு கெடப்பாரு, இன்னிக்கி நீ மாட்டுன அம்புட்டுத்தான். அவரு கேக்காருன்னு நீ ஒண்ணும் பேனர கொண்டார வேணாம். அவரோட பொழப்பே அதான்.

அதைக் கேட்டதும் மனசு ஒரு மாதிரி ஆகி விட்டது. எல்லார் கிட்டயும் எதாவது கேடபாரா.. இந்த பெரியப்பாவுக்கு கண்டிப்பா பேனரு கொண்டு வரக் கூடாது. அவரு குணம் தெரிந்து வேண்டுமென்றே தான் கொண்டு வரவில்லை.

“பாப்பா..”
“ம்.”
“இன்னக்கி என்ன ஆச்சு உனக்கு? ஆச்சிட்ட பேசல, இன்னும் சாப்பிடல புட்டு ஆறிடப் போகுது வந்து சாப்பிடு.”
“இதோ வர்றேன் ஆச்சி.”

மளமளவென்று கை கால் முகம் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தேன். ஹாட் பாக்ஸில் இருந்து ஆச்சி புட்டை எடுத்து தட்டில் வைக்கும் போது லேசாக ஆவி பறந்தது. “ஆறிடும்னு சொன்னீங்க ஆச்சி” என சொல்லி சிரித்தேன்.
“ஆமாடி உங்க ஆச்சி உனக்கு ஆறிப்போன புட்டதான் குடுப்பாங்கலாக்கும்” என அம்மா அதட்டவும், “அவள ஏன் ஏசுற.. நீ சாப்பிடுப்பா” என சொல்லி விட்டு சீனியையும் துருவிய தேங்காய் தூவலையும் புட்டு மேல தூவி விட்டாங்க.
“கசலி வாழப்பழம் தான் பழுத்து இருக்கு, நாட்டுப் பழம் கடையில வாங்கிட்டு வரவா?”
“இருக்கட்டும் ஆச்சி இதே போதும்.”
“நாட்டு வாழை குல அடுப்படில மூட்டம் போட்டு வச்சிருக்கேன், போகும்போது வண்டில முன்னாடி வச்சி கொண்டு போ”
“வேணாம் ஆச்சி வண்டி முன்னாடி வைக்க முடியாது”
“அப்போ சீப்பா வெட்டி தாரேன் வண்டிகுள்ள வச்சி கொண்டு போ.”
“சரி ஆச்சி” என சொல்லி கசலி பழத்தை புட்டில் பிசைந்து சாப்பிட ஆரம்பித்தேன்.”

“எம்மா வீட்ல நாட்டு கோழி அட இருக்கு முத்து மாமாகிட்ட சொல்லி ரெண்டு மூணு சாதி கோழி முட்டை வாங்கி குடு’ என அம்மா ஆச்சி இடம் கேட்டாங்க.
“யாரு முத்து கிட்டயா?”
“ஆமாம்மா.”
“நல்லா கேட்ட போ. அவன் கோழிச் சண்டையை தலை முழுகினதுல இருந்து கோழி வளர்க்குறதில்ல.”
“அவர்கிட்ட இல்லாட்டாலும் யாருகிட்டவாவது வாங்கி தருவாரில்ல”
“அதுவும் சரிதான். பாப்பா சாப்ட்டு முடிச்சிட்டு தாத்தா வீட்ல போயி நா சொன்னேன்னு முட்டை வாங்கிட்டு வா.”
“சரிங்க ஆச்சி.”

வடக்குத் தெருவில் இருந்த அந்த பெரிய காரைவீடு அமைதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. அவை இரண்டும் அந்த வீட்டுக்கு அந்நியமான ஒன்று. எனக்கு அதை பார்த்ததும் கவலை ஆனது. சிறு வயதில் பார்த்து இருக்கிறேன். எப்பவும் ‘கலகல’வென்று இருக்கும். புலிகளின் தோரணையில் உயரமான அந்த சேவல்கள் நடப்பதை பார்க்கவே பயமாக இருக்கும். சண்டையில் சுற்று வட்டாரத்தில் அவர் சேவலை அடிசிக்கிட எதிர் சேவல் இல்லை. அப்பா அந்த முற்றத்தில் என்னை இறக்கி விட்டார்னா நடக்கையில் காலில் பிசுக் பிசுக் என ஒட்டும். அசிங்கப்பட்டு அப்பாவிடம் தூக்கச் சொல்லி அடம் பிடிப்பேன்.
ரொம்ப வருடத்திற்கு முன் நடந்த கோழிச்சண்டை பகையாகி கொலையில் முடிந்தது . அதற்குப் பிறகு கோழி வளர்ப்பதை விட்டு விட்டார்.

கையில் நீண்ட தொரட்டி கம்போடு தாத்தா வெளிப்பட்டார்.பேரப் பிள்ளைகளுக்கு கொடிக்காய் பறிக்க போறார் என தெரிந்தது. என்னைப் பார்த்ததும் சற்று உன்னிப்பாக கவனித்து விட்டு பின்பு உற்சாகமானார்.”அடடே.. வளரா.! வாடா எப்ப வந்த தாயி?”
“காத்தால தாத்தா.”
“என்னடா இந்த பக்கம் தப்புனாப்ல?”
“அப்படில்லாம் இல்ல தாத்தா. மாசத்துக்கு ஒரு முறை ஆச்சிய பார்க்க வருவோம். உங்கள எப்ப கேட்டாலும் வயக்காட்டுக்கு போயிட்டதா சொல்லுறாங்க அதான் பாக்க முடியல.”
“சரித்தா அம்மா நல்லா இருக்காளா ?”
“ ம் நல்லா இருக்காங்க.”
“வராதவ வந்து இருக்க வீட்ல தேயிலத் தண்ணி போட கூட ஆள் இல்ல . மருமவ ஆட்டுக்கு புல்லு அறுக்க போயிருக்கா செத்த இரு வந்துருவா.”
“வேண்டாம் தாத்தா மதியம் கிளம்புறோம். நாட்டு முட்டை வாங்கிட்டு போலாம்னு வந்தேன்.”
“ஓ.. இரு வாரேன், கோவில் கொடைக்கு வந்தப்பவே சொல்லி இருக்கலாம்ல பால்ராசு வீட்ல இருக்கும் வா.”
தொரட்டியை மரத்தில் சாத்தி வைத்து விட்டு தோளில் துண்டை போட்டு நடக்க ஆரம்பித்தார். நான் பின் தொடர்ந்தேன்.

ஊர் கோடியில் இருந்த அந்த வீட்டு முன் நின்றார்.”ஏல பால்ராசு” சிறிது நேரத்துக்கு பின் கதவு திறந்தது. “வா.. வா, முத்து சொல்லி அனுப்பி இருக்கலாம்ல! கமுக்கமா வந்து நிக்க?”
“சோலியா இருப்ப.. தொந்தரவு பண்ண வேண்டாம்னு தான்.”
“அட நீ வேறப்பா. இதுல என்ன தொந்தரவு? யாரு இந்த புள்ள.. என்ன இந்த பக்கம்?”
“நம்ம ரத்தினத்தோட மகபுள்ள பேத்தியா. அட வைக்க முட்டை கேட்டு வந்துருக்கு.”
“சரியாப் போச்சு. நேத்துதான் நாட்டாமை வாங்கிட்டு போனாரு.”
எனக்கு எரிச்சல் வந்தது அந்த பெரியப்பா முட்டையையும் விட்டு வைக்கல போல என நொந்து கொண்டேன்.
“அடடா.. அப்ப வேற யார் வீட்லயும் கிடைக்குமா.. பால்ராசு?”
“இங்க யார்ட முத்து இருக்கப் போகுது? பேசாம இளையரசனேந்தல்ல போயி வாங்கிட்டு வந்துரு.”
“அதான் சரி. வரகனூர் பஸ்ஸுக்குப் போயி வாங்கிட்டு வந்திர்றேன். நேரம்மில்ல, நாம அப்புறம் பேசலாம் வரட்டுமா? வாத்தா” என சொல்லி பதிலுக்கு காத்திராமல் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

ஓட்டமும் நடையுமாக பின் தொடந்தேன். அவசரத்தில் வழியில் இருந்த சீனிக்கல்லை கவனிக்கவில்லை, கால் தடுக்கி லம்பி விழ போனவள் தாத்தாவைப் பிடித்து நின்று கொண்டேன்.
“என்னாச்சி தாயி” என பதறி திரும்பியவர் ‘அடி கிடி” படலையே என்று காலை கவனித்தார்.
”ஒண்ணும்மில்ல தாத்தா செருப்புத்தான் பிஞ்சிருச்சி” என்றேன்.
“பஸ் ஸ்டாப்ல மாரியப்பன் கடை இருக்கு. சர்பத் குடிச்சிட்டு பக்க்கதுலையயே செருப்ப தச்சிட்டு போலாம்டா வா” என்றார்.
சரி என சொல்லி பிஞ்ச செருப்பை கால் விரலுக்கு இடையே பிடித்து கொண்டு லாவகமாக நடக்க ஆரம்பித்தேன். சிறுது நேரத்தில் அருகில் இருந்த பஸ் ஸ்டாப்புக்கு வந்து விட்டோம். மணி பதினொன்னரையை தாண்டி இருந்ததால் வெயில் உக்கிரமாக இருந்தது. நிழலுக்காக பெட்டிகடையினுள் ஒதுங்கி நின்று கொண்டேன்.

“ரெண்டு சர்பத் போடு மாரியப்பா இந்தா வாரேன்“ என சொல்லிவிட்டு தாத்தா நடந்தார் அப்போதுதான் கவனித்தேன். கடைப் பக்கத்தில் பெரியவர் ஒருவர் செருப்பு தைத்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. உச்சி வெயில் அவரை சுட்டெரித்துக் கொண்டு இருந்தது. அதை பொருட்படுத்தாமல் குனிந்து செருப்புத் தைத்து கொண்டிருந்தார். நிழலுக்காகப் போட்டிருந்த சின்ன படுதா கிழிந்து நைந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
காலில் கிடந்த செருப்பை அவர் முன்னால் நகர்த்தினேன். அவர் அதை எட்டி எடுக்கும் முன் தலையில் ஆணி அடித்தது போல (MrMask_)கேசவனின் “செருப்புத் தைப்பவரிடம் கையால் செருப்பை எடுத்து கொடுக்க வேண்டும்.“ என்ற கீச்சு ஞாபகம் வரவே அவசரமாக கையில் எடுத்து இந்தாங்க தாத்தா என்றேன். புன்னகையோடு வாங்கிக் கொண்டார்.

“என்ன ரங்கா, ஒரு பழைய துணி அம்புடலையா? இப்படி வெயில்ல கெடந்து கருகுறியே. சங்கடமாத் தெரியலையா?”
அவர் வெள்ளந்தியாய் சிரித்தார். ”பழகிட்டு.. பெரியவர்கிட்ட சொல்லிருக்கேன். நல்ல சாக்கு ரெண்டு தரேன்னு சொல்லிருக்கார். அது வந்தாதான் நமக்கு நிழலு.”

“பெரியவரா? யார் அது ?”
“நம்ம நாட்டாமைங்க ஐயா”
“அவர்கிட்டவா கேட்டு இருக்க?”
“ஆமாங்க ஐயா, எங்க காலனில எதும் வேணும்னா அவரத்தான் கேப்போம்.காய்ச்ச, மண்டையடி, வயித்து வலினா.. மருந்து மாத்திர கொடுப்பாரு. பள்ளியோடம் போற புள்ளைகளுக்கு நோட்டு, பேனா, பொஸ்தகம் கொடுப்பாரு. நல்ல நாள் பொழுதுன்னா காய்கறி, துணி மணி கொடுப்பாரு. 'ஜீவா படிப்பகத்துக்கு' வருசா வருசம் காலண்டரு கொடுப்பாரு. எங்களுக்காக கோழி கூட வளர்க்கப் போறாராம், நேத்து பேசிக்கிட்டாங்க.

இதெல்லாம் கேட்டதும் எனக்கு என்னோட ‘பிஞ்ச செருப்பால பளார் பளார் என அடி’ வாங்கியது மாதிரி இருந்தது. பெரியப்பா இவருக்கு குடுக்கத்தான் பேனர் துணி கேட்டு இருக்க வேண்டும். நான் அவரை தப்பா புரிஞ்சிகிட்டதை நினைந்து கேவலமாய் உணர்ந்தேன்.

உச்சி வெயில் தலையில் சுள்ளென்று உறைத்தது. தைத்த செருப்பை வாங்கி காலில் போட்டுக் கொண்டு இருபது ரூபாய் நோட்டை நீட்டினேன்.வாங்கிக் கொண்டு பத்து ரூபாய் திருப்பிக் கொடுத்தார். “வச்சிகோங்க தாத்தா” என சொல்லியும் மறுத்து என் கையில் திணித்து விட்டார்.

பெட்டிக்கடையில் சர்பத்தை வாங்கி தாத்தாவிடம் குடுத்து “அவர் கிட்ட குடுங்க தாத்தா, நான் குடுத்தா வாங்க மாட்டாரு” என்றேன். தாத்தா சிரித்து கொண்டே வாங்கி “ரங்கா.. இந்தா புடி வாங்கிக்கோ புள்ள சங்கடப்படும்.” என சொல்லவும் வாங்கிக் கொண்டார்.

ஆச்சி வீட்டுப் பரணில் கோவில் கொடைக்கு வைத்த இரண்டு பேனர்கள் மடித்து இருப்பது ஞாபகம் வந்தது. “தாத்தா இருங்க பஸ்ஸு வர்றதுகுள்ள வந்துடுறேன்.”

ஆச்சி வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.


(படித்துவிட்டு கருத்துகளை பதிவிட வேண்டுகிறேன்.)
நன்றி _/|\_

அன்புடன்,
உங்கள் நிலா (வளர்மதி )

Reply · Report Post