teakkadai1

டீ · @teakkadai1

27th Jun 2016 from TwitLonger

கொசு அடிக்கும் பேட் சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு பெருமளவில் இறக்குமதி ஆகிறது . கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஏன் இங்தியாவில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இன்னமும் அந்த பேட்டை இந்தியாவில் பிராண்டடாக பெரிய அளவில் யாரும் தயாரிக்க முடியவில்லை.

அந்த கொசு பேட்டானது, இங்கே 150 ரூபாய் முதல் கிடைகிறது. இரண்டு மூன்று நிறுவனங்கள் அதை தயாரிக்க முற்பட்டன. ஆனால் விலை ஐநூறு ரூபாயை நெருக்கி வந்தது. எனவே அதனை கைவிட்டு விட்டனர். கோவையில் உள்ள பல தொழிற்சாலைகள், வெளிநாட்டு பொருட்களை குறுக்கு வாக்கில் அறுத்து, அதன் பாகங்களையும், இயங்கும் விதத்தையும் காப்பியடித்து, இங்கே உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவார்கள். அவற்றின் விலை, அந்த வெளிநாட்டுப் பொருட்களின் விலையை விடக் குறைவாகவே இருக்கும். ஆனால் சீனத் தயாரிப்புகளிடம் மட்டும் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை.


தற்போது, சீனர்கள் கொசுவை இழுத்துப் பிடித்து கொல்லும் மெஷினை உருவாக்கி சந்தைக்கு அனுப்பியிருக்கிறார்கள். 1 கிலோ ரசகுல்லா டப்பா அல்லது பழைய பாமாயில் 1 லிட்டர் டப்பா போல இருக்கும் அந்த மெஷினின் பக்கவாட்டின் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். அதில் அல்ட்ரா வயலட் கதிரியக்கம் இருக்கும். கொசுக்கள் அந்த கதிரியக்கத்தால் இழுக்கப்பட்டு (பகலிலும் கூட) மெஷினின் திறப்பு அருகே வந்ததும், அடியில் உள்ள புளோயரால் விருட்டென உள்ளே இழுக்கப்பட்டு, சொர்க்கத்துகோ நரகத்துக்கோ போய்விடும். நாம் பொதுவாக உபயோகிப்பது மஸ்கிடோ ரிப்பல்லண்ட். இவை கொசுவை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு துரத்தவே செய்யும். துரத்தப்படும் கொசுவானது, தன்னுடைய வாழ்க்கையில் 10000 கொசுவாக இனப்பெருக்கம் அடையும் வல்லமை வாய்ந்தது. ஆனால் இம்முறையிலோ சந்ததி பெருக்கம் கட்டுப்படுத்தப் படுவதால், நாளடைவில் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது. இந்த பொறி 500 ரூபாய்க்கே கிடைக்கிறது.


இதே போல் எலியை கொல்லும் எலெக்ட்ரானிக் இயந்திரமும் சந்தைக்கு வந்துள்ளது. நம்முடைய எலிப்பொறியைப் போன்றே இருக்கும் இதில், தேங்காய் சில்லோ, மசால் வடையோ வைக்க வேண்டியதில்லை. எலிகளுக்குப் பிடித்தமான வாசனையால் இழுக்கப்பட்டு உள்ளே வரும் எலி மின்னழுத்தத்தால் உயிரிழக்கும். இந்தியா தான் இதற்கு மிகப்பெரிய மார்க்கெட். எத்தனை ஆயிரம் மளிகைக் கடைகள் உள்ளன. ஆளுக்கு ஒன்று வாங்கினாலே போதும்.


இதுமட்டுமல்ல, தற்போது மிகப்பெரிய பில்டர்கள் எல்லோரும் சீனாவில் தான் பினிஷிங் செய்வதற்கான பொருட்களை வாங்கிகிறார்கள். கட்டிடத்திற்கு அடிப்படைத் தேவையான மணல், செங்கல், சிமெண்ட் மட்டும் தான் இங்கே வாங்குகிறார்கள். மற்ற கட்டுமானப் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்துதான். சின்ன பில்டர்கள் கூட தங்கள் கட்டிட பிளானை எடுத்துக் கொண்டு சீனாவிற்கு செல்லுகிறார்கள். சுற்றிப்பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆங்காங்கே உள்ளவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். இந்தியா திரும்பிவந்து, அந்த விலாசங்களை கொடுத்துவிட்டால் போதும். ஏஜெண்டுகள், அந்தப் பொருட்களை வாங்கி, தேவைக்கேற்ப கண்டெய்னர்களில் போட்டு சீனத் துறைமுகத்தில் கிளியரன்ஸ் வாங்கி அனுப்பிவிடுவார்கள். இங்கே சென்னைத் துறைமுகத்தில் இருந்து, நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது. இவ்வளவு தூரம் அதை கொண்டுவந்தாலும், இங்கே வாங்கும் விலையை விட குறைவாகவே இருக்கும்.


80களில் வெளிவந்த திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், பணக்காரராக சித்தரிக்கப்படுபவரின் வீட்டிலோ அல்லது கதாநாயகியின் அறையிலோ வால் பேப்பர்களை சுவற்றில் ஒட்டியிருப்பார்கள். சில அலுவலகங்களிலும் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இப்போதும் அப்படிப்பட்ட வால் பேப்பர்கள் சென்னையில் கிடைக்கின்றன. ஒரு சதுர அடி 120 ரூபாய் விலை. ஆனால் சுவரில் பெயிண்டிங் செய்ய சதுர அடிக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைதான் ஆகும். அதனால் எல்லோரும் பெயிண்ட் செய்யத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால் இப்போது சீன வால் பேப்பர்கள் சதுர அடி 10 ரூபாய்க்கு கிடைக்கும் தருவாயில் உள்ளன. 10 ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறார்கள். அந்த வால் பேப்பரை ஒட்டுவதற்கான பசை மற்றும் ஆட்கூலி சேர்த்து அதிகபட்சம் சதுர அடி 20 ரூபாய்க்குள் முடிந்துவிடும். எனவே தற்போது தங்கள் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் உத்தேசத்துடன் இருப்பவர்கள் சற்று பொறுமை காக்கவும். விதவிதமான வண்ணங்களில், ஏராளமான டிசைன்களில் வால்பேப்பர்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைப் போலவே ஆஃபீஸ் பர்னிச்சர்களும். அருமையான மாடல்களில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் கிடைக்கின்றன.


எப்படி சீனர்களுக்கு இது கட்டுப்படியாகிறது? எந்த சாதனமாய் இருந்தாலும், அதன் தயாரிப்பு விலையில் மூன்று காரணிகள் அடங்கியிருக்கும். ஒன்று அந்த சாதனத்தை கண்டுபிடித்ததற்கு ஆகும் ஆராய்ச்சி செலவு, இரண்டாவது அதை தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை, மூன்றாவது அதை தயாரிக்க ஆகும் செலவு.


நம் நாட்டில் தான் ஆராய்ச்சி என்பது, குறைந்தது 25 வயதுக்கு மேல் ஆரம்பிக்கும் விஷயமாக இருக்கிறது. 17 வயது வரை பாடம் மட்டும். பி ஈ படிக்கும் போது கடைசி செமஸ்டரில் கூட்டத்தோடு கோவிந்தாவாக ஒரு காப்பியடிக்கப்பட்ட/விலைக்கு வாங்கப்பட்ட பிராஜக்ட், எம் ஈ யில் ஏதாவது ஒரு கான்பரன்ஸ்ஸில் பிரசண்ட் பண்ணும் அளவிற்கு, மேக்கப் செய்து விட்டால் போதும். பி எச்டி படிக்கும் போதுதான் ரிஸர்ச் மெதடாலஜியே தெரிய வரும். அங்கேயும் நான்கு கோர்ஸ், பின்னர் காம்பெரஹென்சிவ் வைவா என்று இரண்டு ஆண்டு ஓடிவிடும். பின்னர் ஒரு இண்டர்நேஷனல் ஜர்னலில் பேப்பரை அடித்துப் பிடித்து போட்டு விட வேண்டியது. பழைய சமன்பாட்டில் டெல்டா எக்ஸ் இப்போ நான் கண்டு பிடிச்சது டெல்டா எக்ஸ் பை ரூட் டூ. இதனால என்னய்யா பிரயோஜனம்னு? கேட்டா, அடுத்து பண்றவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு பதில் வரும்.


அடுத்து வர்றவன் இந்த லிட்டரேச்சரையெல்லாம் படிச்சிட்டு வழக்கமான சடங்கையெல்லாம் பண்ணிட்டு டெல்டா எக்ஸ் பை ரூட் டூ மைனஸ் 1 ந்னு தீஸிஸ் எழுதி முடிப்பான். கேட்டா ரிஸர்ச் எல்லாம் உடனே உலகத்தை தலைகீழா மாத்திடாது, சின்ன சின்ன சேஞ்ச் எல்லாம் சேர்ந்து தான் ரிசல்டண்ட் கிடைக்கும்னு வியாக்கியானம் பேசுவான்.

அன்றாட வாழ்க்கைக்கு என்ன தேவை? எப்படி நம்ம வாழ்க்கையை எளிமையாக்கலாம் என்று யோசித்தாலே ஏகப்பட்ட பிராடக்ட்களுக்கு ஐடியா கிடைக்கும். சீனர்கள் அப்படித்தான் பிராக்டிக்கலாக யோசிக்கிறார்கள். இந்த தேவையை எப்படி சமாளிப்பது? அதற்கு என்ன தீர்வு? அவ்வளவுதான். நூற்றுக் கணக்கில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஒரு முடிவெடுப்பதற்கு பதிலாக, சிந்திக்கிறார்கள். செயல்படுத்துகிறார்கள். பள்ளி அளவிலேயே சிந்தனையை தூண்டும்படி அங்கே பாடத்திட்டம் இருக்கிறது. சுற்றுப்புறத்திலும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்றன. நம் நாட்டிலோ, படி,படி,படி. சுற்றுப்புறத்திலும், உறவு வட்டத்திலும் பெரும்பாலும் படித்து முன்னேறியவர்கள் பற்றியே சிலாகிக்கப்படும். இதனால் போட்டு வைத்த பாதையிலேயே நம் பயணம்.


சின்ன வயதில்தான் மூளை கட்டுப்பாடுகள் இல்லாமல் யோசிக்கும். முப்பது வயதுக்குப் பின்னர், பி எச் டி முடித்தபின்னர், எதை எடுத்தாலும் கன்ஸ்ட்ரயின்கள் தான் நம் மனதில் முதலில் தோன்றும். இது முடியாது, அது கஷ்டம் என்றேதான் ஆரம்பிப்போம்.எனவே யூஸ்புல்லான, வாழ்வுக்கு தேவையான பிராடக்ட் நம்மிடம் இருந்து உருவாகாது. பிராய்லர் கோழி இறக்கை பிய்க்கும் மெசின் ஒரு பி ஈ பிராஜக்ட்தான். மிக உபயோகமான கண்டுபிடிப்பு. ஆனால் இப்போதோ, பிராஜக்டை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் மலிந்துவிட்டது.


அடுத்த விஷயம், மூலப் பொருள். முன்னர் சீனாவின் துயரம் என்று வர்ணிக்கப்பட்ட மஞ்சள் நதி, இப்பொழுது மற்ற நாடுகளுக்கு பொருளாதார துயரத்தை கொடுக்கிறது. நதி நீர் இணைப்பை அவ்வளவு அருமையாக செயல்படுத்தி இருக்கிறார்கள். பஞ்சாப் கோதுமை, பெல்லாரி வெங்காயம், ராஜஸ்தான் மார்பிள் எல்லாம் கன்னியாகுமரிக்கு வந்து சேரும்பொழுது போக்குவரத்து செலவு, பொருளின் விலையில் முக்கிய அங்கமாய் மாறிவிடுகிறது. அங்கே மஞ்சள் நதி சீனாவின் முக்கிய நகரங்களை எல்லாம் இணைக்கின்றது. எரிபொருள் செலவு இல்லாமல், நதியின் போக்கிலேயே பொருட்களை கொண்டு செல்லும்படி நீர்வழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் பொருட்களை கொண்டு செல்லும் செலவு அவர்களுக்கு மிச்சமாகிறது. முன்னர் சென்னையிலும் பக்கிங்ஹாம் கால்வாய் அப்படித்தான் பயன்பட்டது. இப்பொழுது காமெடி சீன் எடுக்க மட்டும்தான் பயன்படுகிறது.


மூன்றாவது தயாரிக்கும் முறை. முன்னர் இந்திய அணியில் வெங்கடபதி ராஜு என்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இருந்தார். பீல்டிங் செய்யும்போது, பவுண்டரி லைன் அருகே நிற்பார். எந்த பக்கம் பந்து மிகக் குறைவாக வருமோ அந்தப் பக்கத்தில்தான் கேப்டன்கள் அவரை நிறுத்துவார்கள். ஏனென்றால், பந்தைக் கண்டதும் அவர், காதலில் விழுந்த கதாநாயகிகளைப் போல ஸ்லோ மோசனில் ஓடிச்சென்று, பந்தை எடுப்பார். ஒரு வேளை வலது கையில் பந்தை எடுத்து விட்டால், அதை மெதுவாக இடது கைக்கு கொண்டுவந்து, கையை வாகாக ஒரு சுழற்று சுழற்றி விக்கெட் கீப்பருக்கு எறிவதற்குள் இரண்டு ரன்களை எதிரணியினர் கூடுதலாக எடுத்து விடுவார்கள்.


ஆனால் சில பீல்டர்கள் பந்தை எடுக்கும் போதே, தங்கள் துரோயிங் ஆர்மால் தான் எடுப்பார்கள். எடுத்த உடனே பிக்கப் துரோ செய்து விடுவார்கள். இரண்டு ரன் எடுக்க நினைக்கும் எதிரணியினர் கூட ஒரு ரன்னுடன் திருப்தி பட்டுக் கொள்வார்கள். இடையில் ஆஸ்திரேலிய அணியில் கூட ஒரு பிராக்டீஸ் செய்து பார்த்தார்கள். இரண்டு கைகளாலுமே பிக் அப் துரோ செய்ய முடிந்தால், ரன்களை குறைக்கலாம், ரன் அவுட் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என. சீனர்கள் தங்கள் பொருட்களை தயாரிக்கும் போது, இப்படித்தான் நேரம் குறைவாகப் பிடிக்கும்படி வேலை செய்யும் பொசிசன்களை அமைத்துக் கொள்கிறார்கள். வேலைக்குத்தகுந்தபடி அதை மாற்றியும் கொள்கிறார்கள்.


வேலையை விரைவாக செய்து முடிக்கும் உபகரணங்களையும் அவர்கள் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் வேலை நேரம் மிகவும் குறைகிறது. தற்போது கூட சுவர்களுக்கு சிமெண்ட் பூசும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்கள். இரண்டு பில்லர்கள் அதில் இரண்டு பிரேம்கள் மேலும் கீழும் செல்லும். எந்த பொசிசன் வேண்டுமென்றாலும் எளிதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். கீழே சிமெண்ட் கலவையை வைத்து விட்டால் போதும்.நாம் செட் செய்த ஏரியாவில் சீராக, விரைவாக கலவையை பூசி விடும். இப்போதைய அடக்க விலை 5 லட்ச ரூபாய் ஆகிறது. விரைவில் பில்டர்கள் இங்கே அதை கொண்டுவந்து விடுவார்கள். இப்போதைய கட்டடங்களில் ஆட்களுக்கு கொடுக்கப்படும் கூலி 30 முதல் 40 சதவிகதம் வரை ஆகிறது. அது இனி விரைவாக குறையும்.


மேலும் சீன அரசு சிறப்பு உறபத்தி மண்டலங்களை பல இடங்களில் அமைத்துள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நல்ல ஐடியா உடன் இருப்பவர், பொருளுக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்ப தொழிற்சாலை வசதிகளை லீசுக்கு எடுத்து உற்பத்தியை தொடங்கி விடலாம். தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு மற்ற நாடுகள் செலவழிக்கும் தொகை, அந்த சாதனத்தில் ஏறிவிடும். இங்கே குறைவான வாடகை மட்டுமே கொடுப்பதால், மூலப் பொருளின் விலை மட்டுமே சாதனத்தின் விலையில் பெரும்பங்காக இருக்கிறது.


நம் நாட்டில் பட்டாசு இறக்குமதிக்கு தடை இருப்பதால் சீன பட்டாசுகளை நேரடியாக இங்கே கொண்டுவர முடியவில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளாக பீகார், உத்திரப்பிரதேச இண்டீரியர் கிராமங்களில் சீனப் பட்டாசுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கூட ஏகப்பட்ட சீன பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. பட்டாசுகள் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் சிவகாசியினர் எல்லோரும் காசிக்கு செல்ல வேண்டியதாகி விடும். ஒரு சீனி வெடி விலைக்கு சீனாக்காரர்கள் ஒரு லட்சுமி வெடியே கொடுப்பார்கள். கண்டுபிடித்ததே அவர்கள் தானே.



பாதுகாப்பாக இருக்குமா என யோசிக்கலாம். மாவுக்கேத்த பனியாரம் என்பதற்கு சீனாதான் உதாரணம். ஒரே டிசைனில், ஒரே நிறத்தில் ஒரு லிட்டர் பெட் பாட்டில்களை தயாரிக்கிறார்கள், ஆனால் ஐந்து விதமான குவாலிட்டியில். முதல் தரமானவை, நார்த் அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும். அவர்கள் கொடுக்கும் விலைக்கு, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் மூன்றாம் தரத்தைத் தான் தயாரிக்கமுடியும். நம் நாட்டில் உள்ள இறக்குமதி வணிகர்கள் பெரும்பாலும் தரம் குறைந்த பொருட்களையே பெரும்பாலும் வாங்கி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அதனால்தான் பொது மக்களிடம் சைனா பீஸ் என்றாலே மட்டம் என்ற எண்ணம் நிலவுகிறது. சீனாவோடு ஒப்பிடுகையில் தொழில்நுட்பத்தில் நாம் தான் பின் தங்கி இருக்கிறோம்.

(புது நண்பர்களுக்காக மீள் பதிவு)

Reply · Report Post