பெயர் (குறுங்கதை)




பெயர்கள் சக்தி வாய்ந்தவை. கடவுள்களின் பெயர்களை உச்சரிப்பதும் இதனால்தான். ஒவ்வொரு பெயர்களுக்கும் வெவ்வேறு வித சக்தி உண்டு. சில பெயர்கள் நம்முள் உற்சாகத்தை ஊட்டுகின்றன. சில பெயர்கள் சக்தியிழக்கச் செய்கின்றன. ஒரு நிமிடம் ஆற்றலை நம்முள் புகுத்தி மறுகணம் நம்மை மௌனத்தில் தள்ளி ஆற்றலிழக்க வைக்கும் பெயர்களும் உண்டு. ஒருமுறை புனாவில் இருந்து மும்பை ஒரு 'ஷேர் கேபில்' பயணம் செய்து கொண்டிருந்தேன். என் சகபயணியும் ஒரு தமிழர். தன் பெயர் பழனி சாமி என்று சொல்லிக் கொண்டார். பழனி சாமி ராணுவத்தில் கணக்கராக பணி புரிகிறார். சொந்த ஊர் ஒட்டன்சத்திரம். உரையாடல் சுவையாக இருந்தது. சமய நல்லிணக்கம் குறித்து பல விஷயங்களைப் பகிரந்து கொண்டார். பைபிளிலிருந்து இரண்டு மேற்கோள்கள் பற்றி விரிவான விளக்கம் தந்தார். "பழனி சாமி, பைபிளை ஆழமாகப் படித்திருப்பது பாராட்டத்தக்கது" என்றேன். அவர் "இதில் பாராட்ட என்ன இருக்கிறது? ஒரு கிறிஸ்தவன் பைபிள் படிப்பது என்ன ஆச்சரியம்?" என்றார். நான் ஒன்றும் புரியாமல் அவரை பார்த்தேன். "என் தாத்தாவின் பெயரை எனக்கிட்டிருக்கிறார்கள் ; நாங்கள் கிறிஸ்தவர்களானதும் என் தந்தை திரவியம் என்ற பெயரையும் ஏற்கனவே இட்ட பெயரோடு இணைத்தார்; பழனி சாமி திரவியம் என்பது என் முழுப்பெயர்" என்று பழனி சாமி சொன்னதும் திரவியம் என்ற பின்னொட்டுப்பெயர் தன் சக்தியை காட்டத்தொடங்கியது. வாயை அடைத்தது. சில நிமிடங்களில் என் கண்ணை மூட வைத்தது. வாஷி வந்தடையும் வரை வாயை அடைத்து கண்ணைக்கட்டி....பெயர்கள் சக்தி படைத்தவை.

Reply · Report Post