எழுத எழுத, எழுதிக் கொண்டே போய், ரொம்பப் பெரிய பதிவாக, எனக்கே போர் அடிக்குது. முடிஞ்சா படிங்க.

-------------------
கல்லூரிவாசல் தான் நான் பார்த்த முதல் அஜித் படம்ன்னு நெனைக்குறேன். ஆக்சுவலி அந்தப் படத்துல பிரஷாந்த் தான் ஹீரோ. இவரு ஒரு ப்ளாஷ்பாக்குல வருவார்; ஹீரோயினுக்குப் பிடிக்காத லூசர் பாய் ரோல்...யார்றா இது....ஸ்மார்டா இருக்காரேன்னு தான் எங்க சித்திஸ்/கசின்ஸ் க்ரூப் எல்லாம் பேசிக்கிட்டோம். பிறகொரு முறை குடும்பமாக விசிஆரில் ஆசை பார்த்து, அட செமையா இருக்கார்ன்னு நெனச்சுக்கிட்டோம். கொஞ்சநாள் பொறு தலைவா; நாய்க்குட்டி கிப்ட் சீனுக்கு எல்லாம் அப்டியே ஜிவ்வுன்னு இருந்துச்சு....

காதல் கோட்டை பார்த்தப்போ, க்ளைமாக்ஸ்ல தேவயானி முகபாவத்துல பின்னுவாங்க. இவரு தேமேன்னு நிக்கறாரோன்னு எங்க எல்லாருக்குமே மனசுல தோனுச்சு. ஆனா யாரும் வெளில சொல்லலை. 'நம்ம அஜித்; இந்தக் குறை எல்லாம் பெரிசு படுத்தக் கூடாது'ன்னு விட்டுட்டோம். நொந்து நூடுல்ஸ் ஆன பின்னொரு நாளில் தான் இத வெளில சொன்னோம். 'அட நானும் நெனச்சேன்; சொல்லலை' ன்னு தான் எல்லார் ரியாஷனும் அப்போ.

'தென்றல் தென்றல் தென்றல் வந்து பூவுக்குள் சிலிர்க்கிறதே' ன்னு ரம்பாவோடு, ராசி படத்துல ஒரு பாட்டு. கிடார் ஸ்டெப்ல அப்டியே புல்லரிக்கும். உல்லாசம் படம் வந்தப்போ படத்துல அஜித் தான் ஹீரோ, vikram சும்மா படத்துல வரார்.. சாப்ட் பாய் மாதிரி ஸீன் போடறாருன்னு நட்பு வட்டத்துல இருக்க, vikram ஃபேன்ஸ் கிட்ட ஒரே வெட்டி சண்டை போடுவோம்.

தோழிகளுடன் சினிமாவுக்குப் போக ஆரம்பித்து இருந்த சமயம் அது. எல்லாரும் சேர்ந்து போய் காதல் மன்னன் பார்த்துட்டு வந்தோம். தெலுங்கு நட்புகள் எல்லாம் "உன்னைப் பார்த்த பின்பு நான்..."னு பரவச நிலைய ரீச் பண்ணிட்டு இருந்தாங்க. எனக்கு 'வானும் மண்ணும்' தான் ரொம்ப பேவரைட். பிறகு வந்த அஜித் படங்கள் எல்லாம் அவள் வருவாளா, நீ வருவாய் என, உயிரோடு உயிராக, தொடரும், உன்னைத்தேடி (மாளவிகாவ மாலா மாலா ன்னு குழைவாகக் கூப்பிடுவாரு) friends கூட்டத்தோடு போய் சென்னைத் தியேட்டர்களைத் தேய்த்தோம். ஒரு செமஸ்டர் விடுமுறையில் வெளியானது வாலி. நான் மட்டும் என் கசின்ஸ் க்ரூப்போடு பார்த்து விட்டேன். அதும் ரிலீஸ் அன்றைக்கே.... என் கசின் சூரியா சொன்னா "போஸ்டரைக் கூட இன்னும் ஆடு கடிக்கல; அதுக்குள்ள நம்ம படம் பார்க்கப் போறோம்ன்னு" ஏன்னா அப்போ FDFSலாம் எட்டாத கனவு....

அந்த சமயம் தான் விஜய் ஷாலினி ஜோடி காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவுன்னு கலக்கிட்டு இருந்தாங்க. நட்பு வட்டத்தில அஜித் க்ரூப், விஜய் க்ரூப் இருந்தாலும், சண்டையெல்லாம் போடாம மானாவாரியா எல்லா படமும் எல்லாரும் பாப்போம். 'விஜய் ஷாலினி ஜோடி நல்லார்க்கு'ன்னு விஜய் க்ரூப் சிலாகிக்கும்போது, நான் மட்டும் அஜித் ஷாலினி சேர்ந்து நடிச்சா நல்லார்க்குமில்ல....ன்னுவேன் ஒரு படி மேல போய் 'அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணா சூப்பரா இருக்கும்'ன்னு ஒரு நாள் எதேச்சையா சொன்னேன். வாய்முகூர்த்தம். அமர்க்களம் வந்துச்சு, Rest is history :)

பிறகு வழக்கம் போல, நட்புகளுடன், ஆனந்தப் பூங்காற்றே, அமர்க்களம், நீ வருவாய் என, முகவரி, பிறகு கசின்ஸ் க்ரூப் கூட 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ன்னு ஒரு அஜித் படம் விட்டதில்ல. கண்டு கொண்டேன்ல அஜித்துக்கு ஐஷ் ஜோடி இல்லன்னு ராஜீவ் மேனன் மேல கோவமா எல்லாம் இருந்துருக்கேன் (உஸ்ஸ்ஸ்)

பிறகு தீனா வந்துச்சு. அஜித் தல ஆனார். எனக்கென்னவோ அஜீத்த ஒரு ரொமாண்டிக் ஹீரோவா பார்த்துட்டு பின்ன மீசை எடுத்து, எடை கூடி ரவுடி கெட்டப்பில் பார்க்கவே பிடிக்கலை(பெப்சி உமா ஜோக் மட்டும் ஓகே). எனக்குள் லேசா அஜித் சுருதி குறைய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தான் அஜித்/விஜய் ரசிக சண்டைகள் எங்கள் நட்பு வட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்த நேரம். கொங்கு பெல்ட் நண்பர் குழாம் முழுக்க விஜய் சைடு தான். நாங்க சவுத் to சென்னை காம்பினேசன் பூரா அஜித் சைடு. சில ஆர்கியுமெண்டுகள் நட்பு முறிவு வரை எல்லாம் போய் இருக்கின்றன. அப்போ தான் சிடிசன் படம் வந்துச்சு. இந்த விஜய் கேங்கை வற்புறுத்தி, FDFSக்குக் கூப்பிட்டுட்டுப் போனோம். அதுகள் தியேட்டர்ல வெச்சே "ஏலே கலெக்டரு" க்கு எல்லாம் எங்களை ரவுண்டு கட்டிருச்சுக :(
நாங்களும் தம் கட்டி கட்டிப் பாத்துட்டு டயர்ட் ஆகிட்டோம். அதுலயும் நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். அஜித் அப்போ ரொம்ப எடை அதிகரிச்சு, மீசை எடுத்து, ஹேர் ஸ்டைல் மாத்தி பார்க்க எங்க அஜித் மாறி இல்லாம வேற மாறி ஆகிட்டார்(சிக்கி முக்குக் கல்லு பாட்டுல்லாம்...:( ப்பா... ). சிடிசன் க்ளைமாக்சில "நான் தனியாள் இல்ல; அறுநூத்தி சொச்சம் மக்களின் ஆன்மா" ன்னு கோர்ட்ல பேசுவாரே... அப்போவே மனசுல தோணிடுச்சு... எங்க க்ரூப்புக்குப் பிடித்த அந்த அஜித் இனி திரும்ப வரப் போவதில்லைன்னு... அதுனால எனக்குள்ள இருந்த அஜித் ரசிகைய நான் தூங்க வெச்சுட்டேன் . பிறகு பூவெல்லாம் உன் வாசம்ல மறுபடி ரொமாண்டிக் ஹீரோன்னு சொன்னாங்க.ஆசையா பாக்கப் போனா,அந்த பழைய அஜித் இல்ல... செல்லா செல்லான்னு ஏதோ ரொமான்ஸ் ட்ரை பண்ணுவாரு.. ஆனா அந்த பழைய சார்ம் இல்லவே இல்ல. அட போங்கப்பா ன்னு ஆகிடுச்சு.சரி இனிமே நமக்கு அஜித் படங்கள் செட் ஆவாதுன்னு முடிவெடுத்தது அப்போ தான்.

"வெல்-விஷர்ஸ்" ன்னு ஒரு பதம் இருக்கே...அதாவது இந்தப் பசங்கல்லாம் லவ்-பெயிலியர் ஆன அப்றோம், என்ன இருந்தாலும் நம்ம லவ் பண்ண பொண்ணு; எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்" ன்னு நெனைப்பாங்களே... அந்த மாதிரி, அஜித் பட ரிலீஸ் அப்போல்லாம், என்ன இருந்தாலும் ஒரு காலத்துல நம்ம அஜித்... படம் நல்லா ஓடணும்" ன்னு தோணும் :)

பின்னே, அசோகா ஒரு முறை டிவில பார்த்தேன். ஏதோ லேசா குட் ஃபீலிங். ரெட்லாம் டிவில பாட்டு பார்த்தே டென்சன் ஆகிடுச்சு. தலக்கு ரவுடி கெட்டப் சூட் ஆவுமுன்னு டிஸ்கவர் பண்ணவர் மட்டும் என் கைல கெடச்சாருன்னு வெய்யுங்க....பிறகு வரிசையா, ஜனா, ஆஞ்சநேயா, ஆழ்வார்(அவ்வ்வ்) ராஜான்னு விமர்சனங்கள்/டிவி யில் பார்த்த சில காட்சிகள்ன்னு என் ரசனைக்கு விழுந்த அடிகள்ல எனக்கு பலத்த ரத்தக் காயம் தான் :) . வில்லன் வரலாறுன்னு கேஎஸ்ஆர் அவரை ஏதேதோ பெர்பார்மன்ஸ் பண்ண வைத்தும் கூட, எல்லா படங்களிலும் நான் அந்த வாலி/கண்டுகொண்டேன்/முகவரி அஜீத்தைத் தேடித் தேடி சலித்துப்போய் இருந்தேன். கிட்டத்தட்ட என் கசின்ஸ் எல்லாரும் இந்த நிலைமைல தான் இருந்தாங்க. ஆனந்தம், ரன் னு லிங்குசாமி படங்கள் பிடித்துப் போய், 'லிங்குசாமி அஜித் வெச்சு படம் எடுக்குறாரு; இது கட்டாயம் பிடிக்கும்"ன்னு ஜி படம் பார்க்க நினைத்து, நல்லா சூடு போட்டுக் கொண்டாயிற்று... டிங் டாங் கோயில் மணி மட்டும் ஆறுதல். பரமசிவன், திருப்பதிலாம் பார்க்கவே நெனைக்கல...டிவி காட்சிகள்லையே சுதாரிச்சுட்டேன்(ஏகத்துக்கு இளைத்து என்னவோ போலாகி விட்ட அஜித்)... .ஒரு முறை CDயில் பார்த்த அட்டகாசம் படத்துல "கண்ணாடி திருப்பினா ஆட்டோ எப்டி ஓடும் ஜீவா" தவிர எதுவுமே தேறல; அக்கம் பக்கம் யாருமில்லா, விழியில் என் விழியில் பாடல்களில், அதுவும் அந்த ரெட்டைக் குழந்தைகளைத் திரிஷா தூக்கிக் கொள்ளும் காட்சியில் அஜித்திடம் லேசாக பழைய சாயல் தெரிய, சரி முயற்சி செய்வோம் ன்னு கிரீடம் படத்தைப் போட்டா அந்த ஓவர்ஹெட் டான்க் ஸீன் மட்டும் ஓகே (அதுல கூட த்ரிஷா தான் ஸ்கோர் செய்வார்); மத்தபடி ஒன்னும் தேறலை. சரி போ, இனி அவ்ளோ தான் ன்னு நெனச்சப்போ தான் பில்லா வந்துச்சு. கோட்/சூட்/காகில்ஸ்ன்னு கேன்க்ஸ்டர் தல ஸ்டைல் காட்டுறார்ன்னு சொல்றாங்களேன்னு பாத்தேன். ஓகே.. இலுப்பைப்பூ ரகம்....பிறகு, ஏகன், அசல் பக்கமெல்லாம் போகவே இல்ல.
பழைய நண்பர் குழாமின் விஜய் க்ரூப் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்க அஜித் க்ரூப்பை வெச்சு செஞ்சாங்க... அவங்க கிட்ட தம் கட்டவும் முடியாமல் (ஏன்னா நம்ம தான் இப்ப ஃபேன் இல்லையே...) ,அதுக்காக அவங்க க்ரூப்புலையும் சேர்ந்துட முடியாம ஒரு மாறி இருதலைக் கொல்லி எறும்பு நிலைமை. அப்பப்ப டிவில வாலி/முகவரி/கண்டுகொண்டேன்/ஆசைலாம் வர்றப்ப தூங்க வெச்ச அஜித் ரசிகை லைட்டா முழிப்பா.. அவளையே அப்டியே மண்டைல ஒரே அடியா அடிச்சு கோமால போட்டுருவேன்.


இப்படியான சமயத்துல தான், மங்காத்தா ரிலீஸ். ரிலீஸ் அன்னைக்கு எதேச்சயா ECRஇல் டிரைவில் இருந்தோம். டக்குன்னு எதிர்பாரா விதமா மயாஜாலுககுள் நுழைந்து மங்காத்தா ஈவ்னிங் ஷோவும் உக்காந்தாச்சு. தல இன்ட்ரோ ஆனதும் தியேட்டர் ஆர்ப்பரிக்குது. சில படங்களை தியேட்டரில் பார்க்கும் இம்பாக்டை நான் உணர்ந்த நாள் அன்று. சால்ட் அண்ட் பெப்பரில் அஜித் நன்றாகவே இருந்தார். பழைய அஜித்தை எல்லாம் தேடாமல், கூட்டத்தோடு ஆர்ப்பரித்துப் படம் பார்க்க முடிந்தது. தல "மனி மனி:" ன்னு கெத்து காட்டும் போதெல்லாம் விசில்/க்ளாப்ஸ் பறக்குது. ஊரே கழுவி ஊத்தி, வாரித்தூத்திகிட்டு இருக்கப்ப டோனி திடீர்னு ஒரு ஹெலிகாப்டர் அடிச்சதும் "சாவுங்கடா ஹேட்டரஸ்" ன்னு டைம்லைன் கொக்கரிக்கும்ல அப்டி ஒரு உணர்வு எனக்கு... "ஒன்ஸ் அபான் எ டைம் நானும் அஜித் ஃபேன் தான் bro" ன்னு இடது கைப்பக்க சீட்டுக் காரரிடம் சொல்லிடாலாமான்னு ஒரே பரபரப்பு :))

இதெல்லாம் வேணாம்; சரியா வராது; "எப்பவும் ரஜினி; அப்பப்ப கமல்" தான் safe அண்ட் சரி ன்னு ஒரு முடிவுக்கு வந்து, அப்டியே போயிட்டு இருந்துச்சு.



அப்றோம் டிவில இங்க்லீஷ் விங்க்லிஷ்ல தல ஒரு சீன்ல வந்தாரு. அவ்ளோ தான். நாத்தனார் பையன் ஊருல இருந்து வந்தப்ப ஹோம் தியேட்டரில் வேதாளம் போட்டான்.. ஹ்ம்ம்... எங்க...
பின்ன ஒரு நாள் டிவில வீரம். பாக்கலாம் ன்னு உக்காந்தா...ட்விட்டர்ல யாரோ.."என்ன தல ஒன்லி சால்டா இருக்கு.. பெப்பரே காணும்?" ன்னு டென்சன் ஆக்குனாங்க. தமன்னா வேற அந்தப் படத்துல அவருக்கு தம்பி மகள் மாறி இருக்கும். இத எதுக்குப் பாத்துக்கிட்டுன்னு விட்டுட்டேன்...விஜய் க்ரூப்ல இருக்க சில சோர்சஸ் கூட ஆரம்பம் படத்துல அஜித் ஸ்டைலிஷ்ஷா இருக்காருன்னு சொன்னாங்க எதுக்கு வம்புன்னு நான் அந்தப் பக்கமெல்லாம் போகல... வீட்டுல "உனக்கு இந்தப் படம் ஒருவேளை பிடிக்கலாம் பாரு"ன்னு 'என்னை அறிந்தால்' போட்டப்ப கூட, ஹேமானிகா போர்ஷன்' அப்பா மகள் ன்னு அழகா வர்ற உனக்கென்ன வேணும் சொல்லு பாட்டு வரை பார்த்துட்டு இந்த நினைவுகளே போதும்ன்னு நிறுத்துட்டேன். ஆக ஒரு காலத்துல அஜித் படமா பாத்துட்டு இருந்த நான் மங்காத்தாவுக்கு அப்றோம் ஒரு அஜித் படம் கூட முழுசாப் பாக்கல...

ட்ரெயலரை நம்பி விவேகம் முதல் நாளே பாத்தே ஆகணும்ன்னு என்னையும் இழுத்துட்டு போற ப்ளான்ல இருக்காங்க வீட்டுல... மங்காத்தா அனுபவம் கிடைக்கப் போவுதா... சிடிசன் பார்த்தப்ப மாதிரி சின்னா பின்னம் ஆகப் போறேனான்னு படம் பார்த்துட்டு சொல்றேன்...._/\_






,

Reply · Report Post