என்னுடைய தீரன் பதிவிற்காக கேள்வியெழுப்பியவர்களுக்காக..


என்னுடைய அந்தக் கட்டுரை எளிமையானது; தீரன் ஒரு நல்ல வணிக திரைப்படம்; படத்தில் இயக்குனரின் உழைப்பு அபாரமானது என்பதிலும், கொள்ளையர்கள் உண்மையிலேயே கொடூரம் புரிந்தவர்கள் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. படத்திலும் அவர்கள் அவ்வாறே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், வடஇந்திய பாலைவன வனங்களில் அப்பழங்குடி இனங்களை நிராதரவாய் விட்டுவிட்ட அரசின் அலட்சியத்தைப் பற்றி படத்தில் எந்தக் கேள்வியும் எழுப்பப்பாதது. காவல்துறையினர் பக்கம் லகுவாக நின்று கொண்டு அவர்களை முழுக்கமுழுக்க சாகச ஹீரோக்களாக மட்டும் சித்தரித்தது, வாழ்வாதரங்களுக்காக இடம் பெயரும் வடஇந்தியர்களை சந்தேகிக்கத் தூண்டியது என இவைகளில் மட்டும்தான் எனக்கு இந்தப்படத்தில் ஒரே மாற்றுக்கருத்து. அதைத்தான் என் பதிவு முன்வைக்கிறது.

ஒரு படைப்பானது நேர்மையாக இரண்டு பக்கமும் நின்று உரையாடியிருக்க வேண்டும் என எண்ணிய ஒரு பார்வையாளனிடம் அப்படியானால் படத்தில் காட்டப்பட்ட உடைமைகளை இழந்தவர்களுக்கு என்ன தீர்வு சொல்வ? என கேட்பது எந்தளவு மடத்தனமோ அதைப்போலவவே, ஒரு மாற்றுப் பார்வையை வேறொர் கோணத்திலான பார்வை என்று பார்க்காமல் "எங்க இருந்தாலும் சாப்பிடற இடத்துக்கு வந்துரு" என பகடி செய்வதும். போலவே.. எல்லாத்துலையுமேவா? பாப்பீங்க என்போருக்கும், கொலை செய்றவன மயிலிறகு தடவச்சொல்லுவீங்களா என்பவருக்கும், சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. உங்களின் கண்கள் வழியேதான் நான் பார்க்கவேண்டும் என நினைப்பது உங்கள் மடத்தனமன்றி என்னுடையதல்ல. மேலும், ஒரு மசாலா சினிமாவை சினிமாவாக மட்டும் அனுகலாமே எனக் கேட்கின்ற மற்றொரு ரகத்தினருக்காக ஒரு கேள்வி "கபாலி" என்கிற ஒரு மசாலா சினிமாவை நம் சமூகம் வெறுமனே மாசாலா சினிமாவாக மட்டும்தான் அனுகியதா?

தோழமையுடன்
கர்ணாசக்தி

Reply · Report Post