vrsm68

vrsm68 · @vrsm68

11th May 2019 from TwitLonger

Joyful Learning


மாணவர்களின் மனஉளைச்சல் தீருமா?

பள்ளி கல்வியில் மாற்றங்களும், மாணவர்களின் ஏமாற்றமும்:

கல்வி என்பது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும் என்கிறது உளவியல். ஆனால் இன்றைய பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் மாணவர்களுக்கு மன உளைச்சலைத் தருவதாக உள்ளது.

கடந்த மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு பல நடைமுறை மாற்றங்களுக்குப் பிறகு நடைபெற்ற பொதுத்தேர்வு.
என்னதான் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டாலும் லட்சக்கணக்கான மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த ஆண்டு பொதுத்தேர்வு.


இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வுகள் BluePrint முறை இல்லாமல் மிகக் கடினமான முறையிலேயே நடைபெற்று மாணவர்களுக்கு மனஉளைச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் 10ம் வகுப்பு கணக்கு, மற்றும் அறிவியல் பாடத்தேர்வுகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடினமாக அமைந்தது.

அனைத்து மாநிலங்களிலும் பாடத்திட்டத்தில் BluePrint எனப்படும் வினாத்தாள் திட்ட வரைவு உள்ளது. அதாவது எந்தெந்த பாடத்தில் இருந்து எவ்வளவு வினாக்கள் கேட்கப்படும், கட்டாய வினாக்கள் எந்த பாடத்திலிருந்து கேட்கப்படும் என்பது தெளிவாக இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு BluePrint முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது பள்ளிகல்வித்துறை. மெல்லக் கற்கும் மாணவர்கள் மட்டுமல்லாது நன்றாக படிக்கும் மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
எல்லா மாணவர்களும் எல்லா பாடங்களையும் படிப்பதென்பது சாபமே.

இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கும் இந்த BluePrint முறை நீக்கப்பட்டது ஏனோ?

இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும், மேல்நிலைக் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

அடுத்ததாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது. சிபிஎஸ்இ உட்பட அனைத்து தேர்வுகளிலும், ஏன் நீட், ஐஐடி உட்பட அனைத்து தேர்வுகளிலும் முதல் இடங்களை பிடித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

முன்பெல்லாம் தினசரி நாளிதழில் தேர்வு முடிவு அன்று மாநில அளவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பட்டியல் புகைப்படத்துடனும், கொண்டாட்டங்களுடனும் வெளியாகும்.
அதை பத்திரப்படுத்தி பொக்கிஷமாக வைத்திருக்கும் மாணவ-மாணவிகள் பல்லாயிரம் பேர்.

இன்றும் பல மாணவ- மாணவிகள் தங்கள் பெயர் நாளிதழில் வராதா என ஏக்கத்தோடு உள்ளனர்.
மாநில அளவில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஒட்டப்படுகிறது. பள்ளிகளில் பல போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல், 2ம், 3ம் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இது போட்டி மனப்பான்மையை அதிகப்படுத்துமே தவிர மனஉளைச்சலை உண்டாக்காது. ரேங்க் பட்டியல் வெளியிடப்பட வேண்டு்ம், தமிழக மாணவர்களின் மாநில அளவிலான சாதனைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும், மாநில அளவிலான சாதனை படைத்தோருக்கு அரசின் சலுகைகள், பரிசுகள் கிடைத்திட வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரேங்க் பட்டியல் வெளியிடாமல் மாவட்ட அளவிலான தேர்ச்சி சதவீதம் வெளியிடுவது பிற மாவட்ட மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாதா? எனவே முன்னர் இருந்த மாதிரி மாணவர்கள் மாநில சாதனைகளின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு போட்டி மனப்பான்மையை வளர்க்க வேண்டும். தமிழக மாணவர்களின் சாதனைகள் பிற மாநிலத்தவர்களுக்கும் தெரிய வேண்டும்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது. தொடர்ச்சியாக 3ஆண்டு பொதுத்தேர்வுகள், கடினமான பாடத்திட்டம் போன்றவையும் மாணவர்களுக்கு மனஉளைச்சலை உண்டாக்குகிறது.
இந்த ஆண்டு 12ம் தேர்ச்சி பெற்றும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்கள் ஏராளம். இவர்கள் கல்லூரி சேர்வதும் கடினம். எதற்காக இப்படி ஒரு கொடுமை. 12ம் வகுப்பு பாடங்களை 11ம் வகுப்பிலேயே நடத்துவதால் தான் 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்றால், 11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பு பாடங்களை நடத்தும் பள்ளிகள் தொடர்பாக புகார் அளிக்க வாய்ப்பு தரலாம்.
பல பள்ளிகள் 11ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.
இந்த 11ம் வகுப்பு மதிப்பெண்கள் கல்லூரி சேர்க்கையின் போது கருத்தில் கொள்ளப்படாது என அறிவித்த அரசு, 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என எப்போது அறிவிக்கும் என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.

மதிப்பெண்கள் 1200ல் இருந்து 600 ஆக குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் பாடங்கள் 1200 மதிப்பெண்களுக்கு படித்ததை விட கூடுதலாகவும், கடினமானதாகவும் உள்ளதென்பதே நிதர்சனமான உண்மை.
ஒவ்வொரு பாடப்புத்தகமும் இரண்டு தொகுதிகள் கொண்டதாகவும், கடினமாகவும் உள்ளன.
இவை 600 மதிப்பெண்கள் கூடுதலுக்கு ஏற்ப குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இத்தகைய கடினமான பாடத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்து விட்டது. இனி வரும் காலங்களில் தமிழகத்தில் மேல்நிலைக் கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கையும் பெரிதும் குறையும் அவல நிலை உண்டாகும்.

இது மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தின் இரண்டு தாள்கள் ஒன்றாக இணைக்கப்பட்டது மேலும் சுமையாகவே உள்ளது. இரண்டு தாள்களாக இருந்த போது மாணவர்கள் இரண்டு தாள்களுக்காக பாடங்களை பிரித்து படிக்க வேண்டிய சூழல் இருந்தது. அது எளிதாகவும் இருந்தது.
தற்போது ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு மொழிப்பாடங்களின் முக்கியத்துவம் குறைந்துள்ளது. ஒரே தாளில் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டிய இன்னலுக்கும் ஆளாகியுள்ளனர்.
மீண்டும் மொழிப்பாடங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என கல்வியாளர்களும் மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் பொதுத்தேர்வு கால அட்டவணையில் ஒவ்வொரு பாடத்துக்கும் போதுமான இடைவெளி யாக குறைந்தது 4 முதல் 5 நாட்கள் விடுமுறை இருக்கும். இந்த முறை அது மிகக்குறைவே. கடினமான பாடத்திட்டம்,
வினாத்தாள் திட்ட வரைவு இல்லை, ஒழுங்கான வினா கேட்கும் முறைகள் இல்லை. எல்லா மாநிலங்களிலும் மாதிரி வினாத்தாள் அமைப்புகள் உள்ளன. இங்கு மட்டும் தான் எப்படி வேண்டுமானாலும் வினாக்கள் கேட்கப்படலாம் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் மாணவர்களுக்கு மனஉளைச்சலை மட்டுமே தருவதாக உள்ளது.

நீட் தேர்வுக்காகவே இத்தனை மாற்றங்கள் என்று கூறப்படுகிறது, தமிழகத்தில் உள்ள எல்லோரும் எழுதப்போவதில்லை நீட் தேர்வு. சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதும் ஒரு தேர்வுக்காக, பல லட்சம் மாணவர்களை வதைப்பது ஏனோ?

சைக்கிளையும், லேப்டாப் பையும் மாணவர்கள் எதிர்பார்க்க வில்லை. முன்னர் இருந்த நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு கல்வி எளிதாக்கப்பட்டு சமச்சீர் கல்வியாகவே இருக்க வேண்டும் என்பதையே மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


முறையான வகுப்பறைகள் இல்லை, கழிவறை வசதிகள் இல்லை, ஆய்வகம் இல்லை, என பல குறைகள் இருந்தாலும் மாணவர்கள் விரும்புவது மகிழ்ச்சியைத் தரும் கல்வியை மட்டுமே. அதற்கான பொறுப்பு கல்வித்துறைக்கும் அரசுக்கும் உள்ளது.

பல்லாயிரம் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் குரல் அரசுக்கு கேட்பது எப்போது?

மற்ற அனைத்து மாநிலங்களிலும் இருப்பது போல அரசு பொதுத்தேர்வுகளில் BluePrint முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும், மாநில அளவிலான சாதனையாளர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும்.

மொழிப்பாடங்கள் மீண்டும் இரண்டு தாள்களாக மாற்றி உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

தமிழில் கடவுள் வாழ்த்து, மொழி வாழ்த்து, நாட்டு வாழ்த்து போன்றவை மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்.

11, 12ம் வகுப்புக்கான பாடத்திட்டம் 600 மதிப்பெண்கள் கூடுதலுக்கேற்ப குறைக்கப்பட வேண்டும்.

ஆய்வக வசதி முறையாக ஏற்படுத்தப்பட்டு செய்முறை வகுப்புகள் முறையாக நடத்தப்பட வேண்டும்.

பள்ளி திறக்கும் வாரத்திலேயே பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும்.

புதியதாக எதையும் மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே இருந்த பழைய நடைமுறைகள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமும் எதிர்பார்ப்புமாக உள்ளது.

பழைய நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும், அதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும், மேல்நிலைக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 100 % மகிழ்ச்சியான கற்றல் என்பது சாத்தியமாகும்.

மாணவர்கள் விரும்பும் வகையில் கல்வி முறைகள் அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மீண்டும் ஒருமுறை முதல் வரியைப் படியுங்கள்.

மகிழ்ச்சியை தரட்டும் கல்வி..

Reply · Report Post