அது தொன்னூறுகளின் இறுதி. எங்கோ திருவிழாவிற்கு வைத்த ஒலிபெருக்கியிலிருந்து, திருவிழா அட்மாஸ்பியருக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு பாடல்- "பூவெபூவெபூவெபூவெபூவே..." கண்டதும் காதல் போல- கேட்டதும் மனசில் அப்பிக்கொண்டது இந்த பூவெபூவெ ஹம்மிங்.

என்ன படமாக இருக்கும்? அதற்கு முன்பாக அரவிந்தன் படம் பார்த்திருந்தேன். அக்கால கட்டத்தில் சரத்குமார் ரசிகனாக இருந்த புண்ணியத்தில் பாடல்களும் ஒரளவிற்கு தலைகீழ் மனப்பாடம். தினத்தந்தி வெள்ளிமலர் துணுக்குகள் உபயத்தில் இயக்குனர் வஸந்தின் அடுத்த படத்திற்கு இசை- யுவன் ஷங்கர் ராஜா என்பதையும் அறிந்திருந்தேன்.
இதையெல்லாம் மனதிற்குள்ளாகவே கூட்டி கழித்துப் பார்த்து- அந்தப்பாடல் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் தான் என நானாகவே ஒரு முடிவிற்கு வந்தேன்.

சரி..எப்படி உறுதிப்படுத்திக்கொள்ள..? இப்போதிருப்பது போல இணைய சவுகரியமெல்லாம் அப்போதில்லை. காஸெட் விற்கும் கடையில் சென்று "அண்ணா.. இந்த பூவெபூவெபூவே.. ன்னு ஒரு பாட்டு வருதே..அது என்ன படம்ணா?!" என கேட்டறியும் அளவிற்கு யாரையும் தெரியாது. அந்தளவிற்கு இன்னமும் வளர்ந்திருக்கவுமில்லை.

ஒரேவழி.. படத்தின் காஸெட்டை வாங்கி போட்டுக்கேட்பது தான். வீட்டில் தரும் சட்டைப்பை காசை மிச்சம் பிடித்து, காஸெட் வாங்குமளவிற்கு தேற்றியாயிற்று. சரி.. குருட்டாம்போக்கில் நாமளே இந்த படம்தானென நினைத்துக்கொண்டு வாங்கி- பிற்பாடு அந்த படமாக இல்லாது போய்விட்டால்?! சுளையாக இருபது ரூபாய். பேசாமல் குமரேசனை கூப்பிட்டுக்கொண்டு புரோட்டா சாப்பிட்டு விடலாமா?!! -இவ்வாறெல்லாம் குழம்பியபடியே அந்த இருபது ரூபாயை ஜியாமென்ட்ரி பாக்ஸின் நியூஸ் பேப்பர் லாக்கரில் ஒளித்து வைத்து இரண்டுநாட்களாக சுற்றிக்கொண்டிருந்தேன்.

மூன்றாம்நாள்- இஷ்டதெய்வம்.. இஷ்டமில்லாத தெய்வம் என அனைத்து பிரகஸ்பதியினரையும் வேண்டிக்கொண்டு, பள்ளி விட்டு வருகையில் காஸெட் வாங்கி வந்தாயிற்று. டேப் ரெகார்டரில் செருகி, ப்ளே பட்டனை அமுக்கும்போது முழுப்பரிட்சை ரிஸல்ட் பார்க்கும் மனநிலையிலிருந்தேன். முதலில் வந்தது "இரவா..பகலா..குளிரா..வெயிலா" பாட்டு. பூவெபூவெபூவெ.. இதில் இல்லையென்றாலும் கூட இதற்கே இருபது ரூபாய் தகும் என்கிற திருப்தி வந்தது. பின் ஒவ்வொரு பாடலாக ஃபார்வர்ட் செய்து கொண்டே வந்து நான்காவதாக பூவெபூவெபூவே'வைக் கண்டடைந்தேன். தேவ கணம்! அப்பெருஞ்சந்தோஷ கணத்தின் புள்ளியிலிருந்து பிரவாகமெடுத்தது தான் எனக்கும் யுவனுக்குமான பிணைப்பு.
பிற்காலங்களில் கூட ஒருசில பாடல்களை கேட்கும் போது- இது யுவனாகத்தான் இருக்கும் என உள்மனசு கட்டியம் கூறும்; தேடிப்பார்த்தால் சரியாகவே இருக்கும்!

பின்பு துள்ளுவதோ இளமை, உனக்காக எல்லாம் உனக்காக, தீனா எல்லாம் கடந்து நந்தா வந்தபோது நான் பாலிடெக்னிக் முதலாமாண்டு வந்திருந்தேன். கொஞ்சகாலத்திற்கு "முன்பனியா..முதல்மழையா.." என் தேசியகீதமாக ஆகிவிட்டிருந்தது. கல்லூரி சென்ற பின்நாட்களில் வீடியோ சாங்ஸ் என்றொரு கலாச்சாரம் எனக்கு அறிமுகமான போது, கிட்டத்தட்ட ஸ்ரீராமஜெயம் போல இப்பாடலை திரும்பத்திரும்பத்திரும்ப கேட்டு/பார்த்திருக்கிறேன். லைலா என்கிற லூஸுப்பெண்ணை இன்றைக்கும் பிடிப்பதற்கு காரணம் இந்தப்பாடல் தானென நினைக்கிறேன்!

பின் வந்த காதல் கொண்டேன் எல்லாம் வரலாறு. தீம் ம்யூஸிக் என்பதையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தியது இந்த ஆல்பம் தான். முதன்முதலாக ஒரு இசையமைப்பாளருக்காக FDFS சென்றோம்.
ஏப்ரல் மாதத்தில்.. வந்தபோது பாலிடெக்னிக் இறுதியாண்டு. அடுத்து வந்த ஐந்தாறு ஆண்டுகளில் "மனசே..மனசே.." பாடாத ஃபேர்வெல் மேடைகளும், அப்பாடல் வரிகளை சுமக்காத ஸ்லாம் புக்குகளும் இல்லையெனலாம்.

பின்பு லாடரல் என்ட்ரியில் என்ஜினியரிங் வந்து அட்மிஷன், ஹாஸ்டல், ரூம், வெளிச்சாப்பாடு என ஏக களேபரத்தில், கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்கள் பாடல்கள் எதுவும் கேட்கவில்லை; கேட்பதற்கான மனநிலையும் அப்போதில்லை.
7ஜி ரெயின்போ காலனி ஆல்பம் வெளியாகியிருக்கிறது என்பதையும், பாடல்கள் அதிரிபுதிரி ஹிட் என்பதையும் காற்றுவாக்கில் அறிந்திருந்தேன். விடுதி அறைக்கு நடந்து கொண்டிருக்கையில், பாதிக்கதவு அடைக்கப்பட்ட ஒரு அறையிலிருந்து- கனாக்காணும் காலங்கள்.. கரைந்தோடும் நேரங்கள்..

"த்தா..சத்தியமா இது 7ஜி தான்"

-சடாரென கதவைத்திறந்து-

"மச்சான்..இது என்ன படம்?"
"7ஜி ரெயின்போ காலனி டா"

-கல்லூரி முடியும் வரை அந்த மூன்று வருட காலமும் பித்து பிடித்தாற்போல யுவன்..யுவன்..யுவன் தான்! இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு, இறுதியாண்டு என விடுதியின் எந்த அறைக்குச் சென்றாலும் பாரபட்சமின்றி யுவன் ஷங்கர் ராஜாங்கம் தான். 7ஜி, புதுப்பேட்டை, பட்டியல், மன்மதன் என பிழியப்பிழிய கேட்டுத் திளைத்துக் கிடந்தோம்.

எஞ்சினியரிங் முடித்து சென்னையில் வேலை தேடித்திரிந்த காலக்கட்டம்.. ஒரு மாநகரமானது எதிர்காலம் குறித்த பயத்துடன் தன் மண்ணில் கால் வைக்கும் ஒரு சிறுநகரத்து இளைஞனுக்கு, தமது அச்சமூட்டும் பரபரப்பைக் காட்டி, மேலும் பயங்கொள்ளச் செய்து ஒருவித பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வைத்திருக்கும். எனக்கும் அதையே செய்தது.
இன்டர்வியூக்கள், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்கள், மொதல்ல ஒரு இருபதாயிரம் கட்டுங்க சார்.. கன்சல்டன்ஸிகள், பதினோரு மணிக்கு மேல சாப்ட போலாம்டா.. காலைல சாப்ட்டாப்லயும் ஆச்சு.. மத்யான லஞ்ச் சாப்ட்டாப்லயும் ஆச்சு..கள்!

ஒரு இன்டர்வ்யூ முடித்துவிட்டு, போத்தீஸிலிருந்து இறங்கி தி.நகர் பஸ்நிலையம் நிலையம் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். கடும் விரக்தி. தெருவில் கிழித்து வீசப்பட்ட வெற்றுக்காகிதம் போல் உணர்ந்தேன். அனிச்சையாய் ஹெட்செட்டை எடுத்து காதில் செருகியதும், உள்ளுக்குள்ளிருக்கும் கொந்தளிப்பை அனிச்சையாய் வெளிப்படுத்தியது கட்டை விரல். இரண்டு செகண்டுகளுக்கு மேல் எதிலும் நிலையில்லை. சேனல்களை மாற்றிக்கொண்டேயிருந்தது. உஸ்மான் ரோடு சிவா விஷ்ணு கோயில் தாண்டியதும் அந்த கார்னரில் ஒரு காப்பி கடையிலிருக்கும். சரியாக அந்த இடத்தில் வரும்போது- "முதல்முறை வாழப்பிடிக்குதே.. முதல்முறை வெளிச்சம் பிறக்குதே.. முதல்முறை முறிந்த கிளையொன்று பூக்குதே.."
-பாட்டு முடிந்து விட்டது. அப்படியே பிளாட்பாரம் மேல் ஏறி, ஒரு காபி சொன்னேன். உறிஞ்சிக்கொண்டே-
"சர்வநிச்சயமாய் இது யுவன்தான். ஆனால் என்ன படம்?"

நேற்றைய தினத்தந்தி ஞாபகம் வந்தது- "நாளை முதல் கற்றது தமிழ்" பாடல்கள்.

அதன்பின் எங்கு..எப்போது காபி குடித்தாலும் இப்பாடல் ஞாபகம் வராமல் இருந்ததுமில்லை; எங்கு..எப்போது இப்பாடல் கேட்டாலும் அன்று குடித்த காப்பியின் மென்கசப்பை உணராமல் போனதுமில்லை!

இதுநாள் வரையிலும் எனது கண்ணீரை என்னைப் பெற்றவளும் கண்டதில்லை; உற்றவளும் கண்டதில்லை! ஆனால் "ஒருநாளில் வாழ்க்கை இங்கு.."வும், பறவையே எங்கு இருக்கிறாய்.."யும் பலமுறை கண்டிருக்கின்றன.

அந்நாட்களின் பின்னிரவுகளில் சிந்திய அத்தனைக் கண்ணீர்த் துளிகளும்.. இப்போது தருமிந்த ஒரேயொரு ஈர முத்தமும்.. உன் பிறந்தநாளிற்கான என் பரிசு! வேறென்ன சொல்ல?! லவ் யூ யுவன்! நல்லார்றா??

Reply · Report Post